தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டுகளில், அதிக முதலீடுகளை ஈர்க்கும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்துள்ளதோடு, 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் முனைப்போடு எடுத்து வருகிறது.
அந்த வகையில், வளர்ச்சியின் அடையாளமாக திகழும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் அதிக அளவில் தொடங்கிட முதலீடுகளை ஈர்த்திடும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த பயணத்தின் போது, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பும் விடுத்தார்.
மேலும், இப்பயணத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து, அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் சார்பில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தமிழ் சொந்தங்களோடு கலந்துரையாடினார்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை சிகாகோவில், முதல்வர் ஸ்டாலினை தமிழ்நாடு அறக்கட்டளை, வட அமெரிக்காவின் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு – FeTNA, சிகாகோ தமிழ்ச் சங்கம், அறம் சிகாகோ, லேக் கவுண்டியில் உள்ள தமிழர்கள் சங்கம், அகரம் தமிழ் அகாடமி, அன்னை தமிழ் அகாடமி, செயின்ட் லூயிஸ் தமிழ் சங்கம், இந்தியா தமிழ்ச் சங்கம், கிரேட்டர் மில்வாக்கி தமிழ்ச் சங்கம், மெக்லீன் மாவட்ட தமிழ்ச் சங்கம், மிச்சிகன் தமிழ்ச் சங்கம், அயோவா தமிழ்ச் சங்கம், வடகிழக்கு விஸ்கான்சின் தமிழ்ச் சங்கம், விஸ்கான்சின் தமிழ்ச் சங்கம், மினசோட்டா தமிழ்ச் சங்கம், டென்னசி தமிழ்ச் சங்கம், கென்டக்கி தமிழ்ச் சங்கம், அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்கம் (ATEA), உலகளாவிய எங்கள் குழுக்கள் சங்கம், தமிழ் தொழில்நுட்ப தொழில்முனைவோர் கவுன்சில் (TTEC), எழுச்சி அமெரிக்கா சங்கம், கொலம்பஸ் தமிழ்ச் சங்கம், கன்சாஸ் தமிழ்ச் சங்கம், வடகிழக்கு ஓஹியோ தமிழ்ச் சங்கம், பியோரியா தமிழ்ச் சங்கம், டேட்டன் தமிழ்ச் சங்கம், அமெரிக்க தமிழ் மருத்துவ சங்கம் (ATMA), அமெரிக்க தமிழ்ப் பள்ளிகள் சங்கம், கிரேட்டர் சின்சினாட்டி தமிழ்ச் சங்கம் (GCTS), குவாட் சிட்டி தமிழ்ச் சங்கம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் பயணம் வெற்றி பெறவும், அதிக அளவிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்திடவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
அப்போது முதல்வர் ஸ்டாலின், உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும், ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்குக் குடும்பத்துடன் வாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
தங்களைச் சந்தித்ததில் அளவில்லா மகிழ்ச்சியடைந்ததாகவும், அமெரிக்க வாழ் தமிழர்களின் நல்வாழ்வு சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வின்போது, தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அயலகத் தமிழர் நலவாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.