பா.ஜ.க-வுக்கு எதிரானவர்களை பழிவாங்க பொது சிவில் சட்டம்: ஸ்டாலின் கருத்து
'பா.ஜ.க ஆட்சியை எதிர்க்க கூடியவர்களை பழிவாங்க வேண்டும் என்று நோக்கத்திலே பொது சிவில் சட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளனர்.' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அண்னா அறிவாலயத்தில் துர்கா ஸ்டாலின் சகோதரர் மருத்துவர் ராஜமூர்த்தி இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டை பொறுத்தவரை, திராவிட மாடல் ஆட்சி எவ்வளவு சிறப்பாக நடைபெற்று வருகிறதோ, அதே போல் இந்திய நாட்டிற்கு ஒரு ஆட்சியும் தேவை. மத்தியில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் ஆட்சி பொறுப்பெற்றதில் இருந்து மதம், சனாதனம் பற்றி மக்களிடையே திணித்து ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
Advertisment
அண்மையில் கூட பொது சிவில் சட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளனர். நாட்டில் ஏற்கனவே சிவில் சட்டம், கிரிமினல் சட்டங்கள் இருக்கிறது. அதை நீக்கிவிட்டு, பொது சிவில் சட்டமாக கொண்டு வந்து பா.ஜ.க கொள்கைகளை அதில் சேர்க்க உள்ளனர்.
அவர்களின் ஆட்சியை எதிர்க்க கூடியவர்களை பழிவாங்க வேண்டும் என்று நோக்கத்திலே, மக்களுக்கு துன்பங்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் இதை செய்கின்றனர். ஏற்கனவே அவர்களை எதிர்க்க கூடியவர்களை சி.பி.ஐ, ஐ.டி, இ.டி போன்ற துறைகளை வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கும் ஆட்சி ஒன்றிய ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது." என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil