Cm Mk Stalin | Ptrp Thiyagarajan: சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டிற்கான முன்னெடுப்புகளை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மேற்கொண்டு சிறப்பாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தமிழக நிதியமைச்சராக செயலாற்றிய பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை நிதித் துறையிலிருந்து தகவல் தொழில் நுட்பத்துறை மாற்றியதற்கான காரணம் முதலவர் ஸ்டாலின் குறித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “மூன்று தலைமுறைகளாக நாட்டிற்கு தொண்டாற்றி வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். இந்தியாவில் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சியில் அமைந்துள்ள என்.ஐ.டியிலும், உலகளவில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனமான எம்.ஐ.டியிலும் படித்தவர்.
பல ஆண்டுகளாக உலகளவில் சிறந்த நிறுவனங்களில் கல்வி கற்று, முக்கிய நிறுவனங்களில் பணியாற்றியிருந்தாலும், அங்கேயே தங்கிவிடாமல் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்து, இங்கேயும் தொழில், வர்த்தகம் என்று ஒதுங்கிவிடாமல், அவரது அப்பா தாத்தாவை போல அரசியலில் பங்கேற்று, அவரது அறிவாற்றலை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறவர் அவர்.
நமது ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகள் நிதித்துறை அமைச்சராக மிகச் சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டவர். அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜனை நான் ஐ.டி துறைக்கு மாற்றினேன். அதற்கு காரணம், நிதித் துறையை போல ஐடி துறையிலும் பல மாற்றங்கள் தேவைப்பட்டன.
அவருடைய தலைமையில் தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகிறது. நான் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாக செயல்படுத்துகிறார் என்பதற்கு இந்த மாநாடே எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அவருடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்” என்று கூறினார்.
நிதியமைச்சராக பணியாற்றிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை ஐ.டி துறைக்கு மாற்றக் காரணம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் தொடர்பாக பி.டி.ஆர். பேசிய ஆடியோ தான் என பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“