Advertisment

'தடைகளை தகர்த்து கம் பேக் கொடுத்திருக்கிறார்': செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் புகழாரம்!

"கோவை மாவட்டத்தில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த 'கம் பேக்' கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவர் தடையெல்லாம் தகர்த்து வந்துள்ளார்." என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
TN CM MK Stalin Praises Minister Senthil Balaji Coimbatore Tamil News

"கோவை மாநகரில் புனரமைக்கப்படாத சாலைகள், பாதாள சாக்கடையால் பாதிப்படைந்த சாலைகள், மண் சாலைகள் ஆகியவற்றை மேம்படுத்த 200 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்." என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

கோவை அனுப்பர்பாளையத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பீட்டில், 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 8 தளங்களுடன் கட்டப்படவுள்ள நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி சிறப்பித்தார்.

Advertisment

இதில், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மின்சாரத்துறை செந்தில் பாலாஜி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, தலைமை செயலாளர் முருகானந்தம், நாடாளமன்ற உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, அந்தியூர் செல்வராஜ், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார் பாடி மற்றும் துறை செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர், "கோவையில் தான் தமிழ் புதல்வன் திட்டம் துவங்கப்பட்டது. இன்று இந்த நிகழ்வில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆட்சி பொறுப்பேற்றப்பிறகு ஒவ்வொரு மாவட்டமாக சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு வருகிறேன்.  

கோவைக்கு இதுவரை 3 முறை வந்து, பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொண்டு திட்டங்களை துவக்கி வைத்துள்ளேன். கடந்த 3 ஆண்டுகளில் அறிவித்த அறிவிப்புகளின் நிலை குறித்து அமைச்சர்களை ஆய்வு சொல்ல அறிவித்து, முதலீடுகள் ஈர்புக்காக அமெரிக்கா சென்றேன்.

அங்கிருந்து வந்த பின்பு அமைச்சர்களிடம் அவற்றின் நிலை குறித்து கேட்டதோடு, ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்யும் பணிகளை கோவையில் இருந்து துவங்கியுள்ளேன். நேற்று முதல் கோவை மாவட்ட மக்களின் கோரிக்கைகளை கேட்டுள்ளோம். 

கோவை மாவட்டத்தில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த 'கம் பேக்' கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவர் தடையெல்லாம் தகர்த்து வந்துள்ளார்.

கோவையில் நூலகத்தொடு சேர்ந்து அறிவியல் மையம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை வந்தது. சென்னையில் அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலகம் உள்ளது போல கோவையில் இந்த பெரியார் நூலகம் உருவாகவுள்ளது. இதன் திறப்பு விழா ஜனவரி, 2026ம் ஆண்டு நடைபெறவுள்ளது. 

நேற்று எல்காட் நிறுவனத்தின் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்தேன். அதுவும் விரைந்து முடிக்கப்பட்டு ஜூன் மாதம் திறக்கப்படும்.

சென்னையின் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை, மதுரை கலைஞர் நூல்கம், ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம் ஆகியவை குறித்த காலத்தில் இந்த ஆட்சியில் முடிக்கப்பட்டுள்ளன.

கோவையில் 35 ஆண்டு கால பிரக்கானையாக இருந்த நில விடுவிப்பு கோரிக்கைக்கு நேற்று ஆணைகள் வழங்கப்பட்டு, 10,000 குடும்பங்கள் பயனடைந்துள்ளன. தங்க நகை தொழிலாளர்கள் குறைகளை கேட்டறிந்து நேரடியாக அவர்களின் இடத்திற்கு சென்றேன். உலக அளவில் முக்கிய தங்க நகை மையமாக விளங்கும் கோவையில் தொழில் தொழில் பூங்கா அமைக்கப்படும் அதில் ஆய்வகமும் அமையவுள்ளது. இதனால், அதிக வேலைவாய்ப்பு உருவாகும்.

விமான நிலைய விரிவாக்கம், சூலூரில் தொழில் மையம் மற்றும் கோவையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக மேற்கு புறவழிச்சாலை, குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டங்கள் ஆகியவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நாடாளமன்ற தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் முக்கியமான கிரிக்கெட் ஸ்டேடியம் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கவுள்ளது. இந்தியாவின்
தகவல் தொழில் நுட்ப மையமாக கோவை உள்ளது.

கோவை எல்காட் வளாகத்தில் 17.17 ஏக்கர் பரப்பளவில் மேலும் ஒரு ஐடி பூங்கா அமைக்கப்படும். இதனால் 31 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். சின்னியம்பாளையம் முதல் நீலாம்பர் வரை 5 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட மேம்பால சாலை விரிவிக்கப்டும். தொண்டாமுத்தூரில் யானை புகாத வகையில் நவீன பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும், ஆனைமலை கூட்டு குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும், 295 பொள்ளாச்சி கிராமங்களுக்காக கூட்டுக் குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும்.

கோவை மாநகரில் புனரமைக்கப்படாத சாலைகள், பாதாள சாக்கடையால் பாதிப்படைந்த சாலைகள், மண் சாலைகள் ஆகியவற்றை மேம்படுத்த 200 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, மக்களுக்கான பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு, தமிழ்நாடு அனைத்து துறைகளிளும் வளர்ச்சி அடைந்து, சிறந்த மாநிலமாக உள்ளது. இப்போது, தெற்கு தான் வடக்கிற்கும் வாரி வழங்குகிறது." என்று அவர் கூறினார். 

இந்நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கலைஞர் கலந்து கொண்டனர்.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Cm Mk Stalin V Senthil Balaji Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment