க.சண்முகவடிவேல்
தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதிகளில் காவிரி நீரைக்கொண்டு நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் ஜீன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 220 நாட்களுக்கு, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். இதற்கு 372 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். இதனால், குறைந்தபட்சம் அணை நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருப்பு இருந்தால் மட்டுமே ஜீன் 12-ம் தேதி அணை திறக்கப்பட்டு வந்தது.
அணை நீர்மட்டத்தோடு, பருவமழையும் கை கொடுத்தால் மட்டுமே, குறுவை சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் திறக்க முடியும். நீர் மட்டம் குறைவாக இருந்த ஆண்டுகளில் மேட்டூர் அணை திறக்கப்படுவது ஒத்திவைக்கப்படும். அணை கட்டப்பட்ட 89 ஆண்டுகளில் இதுவரை 19 முறை ஜீன் 12-ம் தேதியிலும், 13 முறை அதற்கு முன்னதாகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், பருவமழை முன் கூட்டியே தொடங்கியதாலும், கர்நாடக அணைகள் நிரம்பியதாலும், முன் கூட்டியே மே 24ம் தேதி அணை திறக்கப்பட்டது. சராசரியாக டெல்டா மாவட்டங்களில் மூன்றரை லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு முன்கூட்டியே திறந்ததாலும், பருவமழை கை கொடுத்ததாலும் கடைமடை வரை நீர் பாய்ந்து, 4.26 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்தது.
நடப்பாண்டிலும் இதேபோல், அதிக சாகுபடிக்கு திட்டமிட்டு 80 கோடி ரூபாயில், டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. ஜீன் முதல் வாரத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இரு நாட்களுக்கு முன் பருவ மழை துவங்கியுள்ளது. ஆனாலும் கர்நாடக அணைகளில் நீர் வரத்தும், நீர் மட்டமும் குறைவாகவே உள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் 124.80 அடி உயரத்தில், 82.30 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. 3,702 கன அடி நீர்வரத்தும், 352 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அப்போது மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். மொத்தம் 120 அடி கொண்ட மேட்டூர் அணையில் 103.48 அடி நீர்மட்டம் இருப்பதால், குறிப்பிட்டபடி இன்று குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் திறந்து வைப்பு
இந்நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 3வது முறையாக இன்று காலை மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீரை மலர்கள் தூவி திறந்து வைத்து பேசினார். அப்போது, கடைமடை வரை காவிரி நீர் செல்லும் வகையில் திமுக அரசு தூர்வாரும் பணிகளை களப்பணிகளுடன் நேரில் சென்று பார்த்து துரிதப்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உரிய நேரத்தில் நீர் திறப்பதன் மூலம் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
“கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 23 லட்சத்திற்கும் மேலானவர்கள் பயன் பெற்றுள்ளனர். டெல்டா விவசாயிகளுக்காக குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் வழங்கப்படும், வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும், குறுவை சாகுபடிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கின்றேன். திமுக அரசு பதவியேற்று 3-வது ஆண்டாக மேட்டூர் அணையில் உரிய காலத்தில் ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 5 லட்சம் ஏக்கருக்கும் மேலாக குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளது" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
— Indian Express Tamil (@IeTamil) June 12, 2023
விழாக்கோலம் பூண்டுள்ள கல்லணை
முன்னதாக, மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி, முக்கொம்பு, கல்லணையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. அப்பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான பணிகளும் கடந்த வாரத்தில் துவங்கின.
மேட்டூர் அணையில் இருந்து இன்று திறந்து விடப்பட்ட தண்ணீர் திருச்சியில் உள்ள முக்கொம்பு மேலணைக்கு வரும் 15-ம் தேதி வந்தடையலாம், அங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்டவுடன் 16-ம் தேதி காலை தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பருவ காற்றும் சற்று கூடுதலாகவே வீசி வருவதால் தண்ணீரின் வேகமும் அதிகரித்து குறித்த நேரத்தில் முக்கொம்பு, கல்லணையை தண்ணீர் வந்தடையும்.
நவீன வசதிகள் இல்லாத காலத்தில் களிமண் மற்றும் மரங்களைக் கொண்டு கட்டப்பட்ட கல்லணை வரலாற்று பெருமையுடன் நிற்கின்றது. ஆசியாவிலேயே பயன்பாட்டில் உள்ள மிகப்பழமையான அணை கல்லணை என்ற பெருமையுடன் எந்த சேதாரமும் இல்லாமல் கம்பீரமாக கல்லணை காட்சியளிக்கின்றது.
பலநூறு ஆண்டுகளை கடந்திருக்கும் கல்லணையில் ஆண்டு தோறும் மராமத்து பணிகள் நடப்பது வழக்கம். இருப்பினும் கல்லணை திருச்சி மாவட்டத்தையும், தஞ்சை மாவட்டத்தையும் இணைக்கும் பாலத்தை தாங்கி நிற்பதால் அந்தப் பாலத்தை பாதுகாக்கவும், கல்லணை முதல் திருக்காட்டுப்பள்ளி வரை காவிரி கரைகளை பலப்படுத்தவும், நபார்டு வங்கி உதவியுடன் கல்லணையில் இருந்து சுமார் 9 மைல் தூரம் வரை உள்ள கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு, திருக்காட்டுப்பள்ளி, குடமுருட்டி ஆறுகளின் மதகுகள், பாலத்தின் தூண்கள் மற்றும் பாலத்தை பலப்படுத்தும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று, ரூ.122.6 கோடி மதிப்பீட்டில் அனைத்துப்பணிகளும் பெரும்பான்மையாக நிறைவடைந்திருக்கின்றது. இதனால் மேட்டூரில் இருந்து இன்று திறந்து விடப்பட்ட தண்ணீர் வரும் 16-ம் தேதி கல்லணைக்கு வந்ததும் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்ட ஆட்சியர்கள் டெல்டா பாசன வசதிக்காக தண்ணீரை திறந்து வைப்பர்.
கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் நிகழ்ச்சி விழாக்கோலமாக டெல்டா விவசாயிகளால் கொண்டாடப்படும். பெரும்பான்மையானோர் கல்லணையில் கூடுவர். இதனால் கல்லணை பாலம் முழுவதும் புதிய வர்ணங்களால் ஜொலிக்கின்றது. கல்லணையில் உள்ள காவிரித்தாய், உழவர் சிலை, தூப்புரவு பணியாளர் சிலை, ராஜராஜ சோழன் சிலை, மீன் பிடிப்பவர் சிலைகளும் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது.
காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் உள்ள 116 ஷட்டர்களின் செயல்பாடுகள் சோதனை செய்யப்பட்டு, பராமரிப்பு செய்யப்பட்டு கல்லணையில் தண்ணீர் திறப்புக்கு தயாராக இருக்கின்றது. மேட்டூரில் இருந்து வரும் தண்ணீரை வரவேற்கும் விதமாக கல்லணையில் அனைத்து செயல்பாடுகளும் நிறைவுற்று விவசாயிகளின் நீராதாரத்தை நிவர்த்தி செய்யும் விதாமாக அனைத்து நிலைகளிலும் தயார் நிலையில் காட்சியளிக்கின்றது புதுப்பொலிவுடன் கல்லணை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.