/indian-express-tamil/media/media_files/2025/06/12/AeH33h12Jv3pq5TXvO8m.jpg)
மேட்டூர் அணையின் வரலாற்றில் 92ஆவது ஆண்டு காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின். இதன் மூலம் 17.15 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும்.
மேட்டூரில் காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டும் போது 93.47 டிஎம்சி நீர் இருப்பு இருக்கும் . மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரைப் பயன்படுத்தி சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 16 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்கின்றனர். மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை 230 நாட்களுக்கு மொத்தம் 330 டிஎம்சி நீர் தேவைப்படும். அணையில் நீர் இருப்பை பொறுத்து, ஜூன் 12ஆம் தேதிக்கு முன்போ, அல்லது காலதாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டுமானால் அணையில் குறைந்தபட்சம் 90 அடிக்கு நீர் இருந்தால் மட்டுமே சாகுபடிக்கு முழுமையாக நீர் திறக்க முடியும். நடப்பாண்டில் அணையின் நீர்மட்டம் 115 அடியாக இருப்பதாலும், பருவமழை தீவிரமடையும் என்று எதிர்ப்பதாலும் குறித்த நாளான ஜூன் 12ஆம் தேதியான இன்று பாசனத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணையில் வலது கரையில் உள்ள மேல்மட்ட மதகுகளின் மின் விசையை இயக்கி தண்ணீரைத் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில், உரிய காலத்தில் (ஜூன் 12-ம் தேதி) டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது இது 20ஆவது முறையாகும். நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 12ஆம் தேதி முன்பு 11 முறையும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தள்ளிப்போனது 61ஆவது முறையாகும் என்பது குறிப்பிடதக்கது.
மேட்டூர் அணையில் இருந்து துவக்கத்தில் வினாடிக்கு 3,000 கன அடி வீதம் திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக வினாடிக்கு 12,000 கனஅடி வரை அதிகரிக்கப்படும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் சுரங்க மின் நிலையம், அணை மின் நிலையம் மற்றும் 7 கதவணைகள் மூலம் 460 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற இவ்விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா. வேலு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலர் எஸ்.ஆர். சிவலிங்கம், நீர்வளத்துறை திருச்சி மண்டலத் தலைமை பொறியாளர் தயாள குமார், சேலம் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிருந்தாதேவி மற்றும் விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.