மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
ஸ்டாலின் பிரதமர் மோடியுடனான தனது சந்திப்பின் போது, ஈழத் தமிழர்களுக்கு சமமான அரசியல் மற்றும் சிவில் உரிமைகளை உறுதி செய்வதற்கான மாநிலத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவான அறிக்கையை வழங்கினார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கைத் தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரினார்.
வெள்ள நிவாரணம், மத்திய வரியில் மாநிலத்துக்கு அளிக்கும் பங்கு, திமுக அரசு அறிவித்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட ‘நமது மாநில உரிமைகள்’ பிரச்னைகளை முன்னிலைப்படுத்தவே இந்தக் கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘அண்ணா-கலைஞர் அறிவாலயம்’ கட்சி அலுவலகத்தையும் ஸ்டாலின் ஏப்ரல் 2ஆம் தேதி (சனிக்கிழமை) திறந்து வைக்கிறார்
அதன்படி 2வது நாள் பயணத்தில், இன்று காலை 10. 30 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, அவரது இல்லத்தில் வைத்து ஸ்டாலின் சந்திக்கிறார். தமிழகத்துக்கு தேவையான நிலுவையில் உள்ள நிதிகள், ஜிஎஸ்டி இழப்பீடு உள்ளிட்டவை குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கபடும் என தெரிகிறது.
மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஸ்டாலின் சந்திக்க உள்ளார். மேற்கு வினோத் நகரில் உள்ள ராஜ்கியா சர்வோதயா பால் வித்யாலயாவில் காலை 11.30 மணிக்கு ஸ்டாலினை கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் வரவேற்கின்றர். அங்கு, டெல்லி அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார பராமரிப்புக்கான ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்கை கூட்டாக பார்வையிடுகின்றனர்.
மேலும் 4.30 மணியளவில், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலை ஸ்டாலின் சந்திக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“