/indian-express-tamil/media/media_files/2025/05/31/iFmHl6vdeaCZHT6Ls51B.jpg)
முதல்வர் ஸ்டாலினின் மதுரை வருகையை ஒட்டி பந்தல்குடி சாலையில் சாக்கடை கலக்கும் கால்வாய் பகுதியை துணியால் மூடப்பட்ட விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்துள்ளார்.
தி.மு.க பொதுக்குழு கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மதுரை உத்தங்குடியில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் இன்று சனிக்கிழமை மதுரை வருகிறார். தொடர்ந்து அவர் மதுரை விமான நிலையம் முதல் மேலபொன்னகரம் வரையுள்ள பல்வேறு பகுதிகளில் ரோடு ஷோவிலும் பங்கேற்கிறார். அவரை வரவேற்க பரப்புரை, சாலைகள் புதுப்பித்தல், அலங்காரம் போன்ற பணிகள் நடந்தன.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் வருகையை ஒட்டி மதுரை பந்தல்குடி சாலையில் சாக்கடை கலக்கும் பகுதி துணியால் மூடப்பட்டுள்ளது. கழிவுகள் செல்லும் கால்வாய் தூர்வாரப்படாத நிலையில், சுமார் 2 கிலோ மீட்டருக்கு அதிகாரிகள் துணியால் மூடியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, பந்தல்குடி கால்வாய் கோரிப்பாளையம் நரிமேடு செல்லும் பகுதியில் இடையே உள்ள இடத்திலும், அதுபோல நகரின் ஆங்காங்கே சரி செய்ய முடியாத இடங்களில் திரை மறைவை ஏற்படுத்தி திராவிட முன்னேற்றக் கழக கோடி நடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோ நடக்கும் வழியில் அவரது கண்ணில் படாத அளவுக்கு துணியை வைத்து மறைக்கப்பட்டு இருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகிய நிலையில், "உண்மையை மறைத்தாலும் வாசனையை எப்படி மறைப்பது?" என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். மேலும், "முதல்வர் வருகைக்கு ஏற்கெனவே தெருவுக்கு மேல் ஓவியங்கள், விளம்பரங்கள் போதும். இப்போது சாக்கடை மூடும் கம்பளம் கூட?. இந்த நாடகம் நிறுத்தப்பட வேண்டும். ஒரு நாள் வருகைக்காக நடிக்காமல், நிலையான சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். துணியால் மூடியாலே நச்சுப் வாசனை மறையாது. இது மக்களை ஏமாற்றும் செயல்" என்று தெரிவித்துள்ளனர்.
விளக்கம்
இந்த நிலையில், பந்தல்குடி சாலையில் சாக்கடை கலக்கும் கால்வாய் பகுதியை துணியால் மூடப்பட்ட விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “கால்வாய் மறைக்கப்பட்ட விவகாரம் தற்போது எனக்கு தெரியவந்துள்ளது. உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்,” என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.