தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு 2 நாள் (21.02.2025 மற்றும் 22.02.2025) சுற்றுப்பயணமாக வருகை தர உள்ளார். இந்தப் பயணத்தின் போது பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் பொதுமக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடையும் வகையிலும், மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளின் வாயிலாக வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் 21.02.2025 நாளை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் 704 கோடியே 89 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 602 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 384 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 386 கோடியே 92 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 44,689 பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்கள்.
தொடர்ந்து 22.02.2025 அன்று வேப்பூர் வட்டம், திருப்பெயர் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள “பெற்றோரைக் கொண்டாடுவோம்“ மண்டல மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - கடலூர்.