சேலம் மாநகராட்சிக்குச் சொந்தமான அண்ணா பூங்காவில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு முழு உருவச் சிலையுடன் மணி மண்டபம் கட்டப்பட உள்ளது. 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் மணிமண்டபத்திற்கு நடைபெற்ற பூமி பூஜையில் முதல் பழனிச்சாமி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து மணிமண்டபத்துக்கான தோற்றத்தை பொதுமக்களுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி அறிமுகப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மணிமண்டபம் சேலம் மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கும் என்று தெரிவித்தார். மேலும் காவிரி விவகாரம் குறித்து கேள்வி கேட்டபோது, “அனைத்து கட்சித் தலைவர்களை சந்திக்கப் பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. காவிரி விவகாரத்தில் மே 3ஆம் தேதிக்குள் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நல்ல தீர்வை மத்திய அரசு காண வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அரசு பின்பற்றவில்லை. இதில் மே 3ம் தேதிக்குள் காவிரி குழுவின் வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வாறு உத்தரவு காலக்கெடு நிறைவு பெற உள்ள நிலையில், மேலும் 2 வாரங்கள் கால அவகாசம் கேட்டு மத்திய அரசு முறையிட்டுள்ளது.
இவ்வாறு இழுபறியாகி வரும் காவிரி விவகாரத்தால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் உச்சத்தை அடைந்துள்ளது. மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகத்திற்கு காவிரி நீர் வராததையும், அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடாத மத்திய அரசையும் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.