Virudhunagar | Cm Mk Stalin: விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டி அருகே ஆவியூர் - கீழஉப்பிலிக் குண்டு ஆலையில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரிக்கு பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளன. குவாரியில் உள்ள அறையில் வெடிமருந்துகளை இன்று காலை இறக்கி வைத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடிமருந்துகள் வெடித்து சிதறியுள்ளன.
இந்த கோர விபத்தில் துரை, குருசாமி, கந்தசாமி ஆகிய 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், விபத்து தொடர்பாக ஆவியூர் காவல் நிலையத்தில் குவாரி பங்குதாரர் சேது ராமன் என்பவர் சரணடைந்துள்ளார். இந்த நிலையில், குவாரி உரிமையாளர்கள் ராஜ்குமார் மற்றும் சேது ராமன் ஆகிய இருவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஸ்டாலின் இரங்கல்
இதனிடையே, விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கல்குவாரி வெடி விபத்தில் உயிரிழந்த 3 தொழிலாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் இன்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“