சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இரு கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களுக்கு இடையே நவம்பர் 15-ம் தேதி கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரிக்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, கோஷ்டி பூசல் மற்றும் உட்கட்சி பூசல்கள் மீண்டும் தமிழக காங்கிரஸை குலைத்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கே.எஸ். அழகி 2019 லோக்சபா தேர்தல், 2021 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் கட்சியை குறிப்பிடத்தக்க வகையில் வழிநடத்திய பெருமைக்குரியவர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) தலைமை 2019 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அழகிரியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சில தொகுதி அளவிலான நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக சென்னையில் உள்ள மாநிலக் கட்சித் தலைமையகத்தில் இரு காங்கிரஸ் கோஷ்டி உறுப்பினர்களுக்கு இடையே நவம்பர் 15-ம் தேதி மோதல் வெடித்த சம்பவம்தான் அழகிரிக்கு எதிரான காங்கிரஸ் கோஷ்டியில் சமீபத்திய அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பல காங்கிரஸ் தொண்டர்கள் காயமடைந்த நிலையில், காவல்துறை தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டியதாயிருந்தது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நியமனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து அழைத்து வரப்பட்ட மனோகரனின் ஆதரவாளர்கள் அழகிரியின் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றனர்.
கைகலப்புக்கு வழிவகுத்த ஆதரவாளர்கள்
2024 லோக்சபா தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்க, கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, இந்த மோதல் வெடித்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நவம்பர் 15-ம் தேதி நடந்த மோதலை தீவிரமாக எடுத்துக்கொண்டு ரூபி மனோகரனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, அதன் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அவரை இடைநீக்கம் செய்ய முடிவு செய்தது. ஆனால், இந்த வழக்கில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடைமுறைகளை சரியாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி ரூபி மனோகரனின் இடைநீக்கத்தை காங்கிரஸ் கட்சி மேலிடம் நிறுத்தி வைத்தது.
கே.எஸ். அழகிரிக்கு எதிராக மாநிலக் கட்சிக் கோஷ்டி ஒன்று களமிறங்கி உள்ளதாகவும், அவர்கள் டெல்லியில் சில தலைவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் தமிழக காக்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. “அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டபோது நாங்கள் அனைவரும் கவலைப்பட்டோம்… அவரது தலைமையில் கடந்த நான்கு ஆண்டுகள் நன்றாகத்தான் இருந்தது. கடந்த இரண்டு தேர்தல் முடிவுகள் அவரது மதிப்பை உறுதிப்படுத்தியுள்ளன” என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். “நான் அவரை துறவி என்று அழைக்க மாட்டேன், ஊழல் போன்ற விஷயங்களில் என்னால் அவருக்கு கறைபடியாதவர் என்று சான்றிதழ் கொடுக்க முடியாது. ஆனால் அதிக சர்ச்சைகள் இல்லாமல் கட்சியை நடத்துவது முதல் தி.மு.க கூட்டணியில் பேரம் பேசுவது, பேச்சுவார்த்தை நடத்துவது என அனைத்திலும் அனுபவம் வாய்ந்த தலைவராக அவரால் செயல்பட முடிந்தது.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்து வருகிறது. 2019 மக்களவைத் தேர்தலில், அக்கட்சி போட்டியிட்ட 9 இடங்களில் 8 இடங்களில் வெற்றி பெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலில், அக்கட்சி போட்டியிட்ட 25 இடங்களில் 18 இடங்களைக் கைப்பற்றியது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நவம்பர் 15-ம் தேதி நடந்த வன்முறை சம்பவம், “விஷயங்களை இன்னும் மோசமாக்க திட்டமிடப்பட்டது” என மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டினார். பட்டப்பகலில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் கட்சி எம்எல்ஏ ஒருவர் 300 ஆதரவாளர்களை சொகுசு பேருந்துகளில் அழைத்து வந்து தர்மசங்கடமான காட்சியையும் கைகலப்பையும் ஏற்படுத்தினார். எப்போதும் போல, வன்முறைக்கு காரணமான எம்.எல்.ஏ. டெல்லியில் உள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி இடைநீக்கத்தை நிறுத்தியுள்ளார். ஒருவர் இந்த கட்சியில் வெற்றிபெற டெல்லியில் ஒரு காட்பாதர் தேவை என்று அந்த மூத்த காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டினார், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி பொறுப்பேற்ற பிறகு அவரது ‘காட்பாதரால்’ கைவிடப்பட்டதால் அழகிரி இப்போது எதிர்ப்பை எதிர்கொள்கிறார்.
அழகிரியை மாற்ற வேண்டும் என்று சில தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளனர். காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்த கருத்துப்படி, இந்த விஷயத்தில் எந்த திட்டத்தையும் வெளியிடாமல் கட்சித் தலைமை அவர்களுக்கு மௌனத்தை பதிலளித்துள்ளது. “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் சில முக்கியப் பதவிகள் இன்னும் நிரப்பப்படவில்லை. தமிழக பொறுப்புக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார். 39 எம்.பி.க்கள் எங்கள் பக்கம் இருக்கும் ஒரு மாநிலத்தில் தனிப்பட்ட தலைவர்களின் நலன்களுக்கு தலைமை இருக்க முடியாது” என்று கூறியதாக மாநிலக் கட்சித் தலைவர்களுக்கும் உயர் மட்ட தலைமைக்கும் இடையிலான தகவல்தொடர்புகளை நன்கு அறிந்த ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் பிரச்சினைகளைத் தவிர்க்க எச்சரிக்கையான நிலைப்பாட்டை எடுத்துள்ள காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையை மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என்று கூறினார். ஆனால், தான் கே.எஸ். அழகிரியை பதவி நீக்கம் செய்ய கோரவில்லை என்றும், அவர் மீது தனக்கு எந்தவிதமான தனிப்பட்ட குறைகளும் இல்லை என்றும் அவர் கூறினார்.
“காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நவம்பர் 15-ம் தேதி குழப்பம் ஏற்படுவதற்கு முன்பு, ஒரு கூட்டத்தில் நானும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவும் கலந்து கொண்டோம். அதில் கே.எஸ். அழகிரி சில வரம்பு மீறிய வார்த்தைகளைப் பயன்படுத்தினார். பின்னர், அவர் வெளிநடப்பு செய்து ஒரு தலைவர் மற்றும் ஒரு தொண்டர் உட்பட இருவரை அறைந்தார். இந்த காரணிகள் அனைத்தும் புதிய தலைமைக்கான அழைப்புக்கு வழிவகுத்தன” என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
மேலும், “அவரது (கே.எஸ். அழகிரியின்) பதவிக்காலம் முடிந்துவிட்டது. அவரை பதவி நீக்கம் செய்ய நான் அழைப்பு விடுக்கவில்லை. மேலும், நான் உயர் மட்ட தலைமையிடம் கூட பிரச்சினையை கொண்டு வரவில்லை. ஆனால், நான்கு அண்டுகள் ஆகிவிட்டது. ஒரு வருடத்திற்கும் மேலாக, தமிழக காங்கிரஸ் கட்சி புதிய தலைவரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது” என்று காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தற்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியை சீரமைக்க உள்ளதால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை சீரமைத்து அழகிரியை மாற்ற இன்னும் சிறிது காலம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“