தமிகத்தில் உள்ளாட்சி அமைப்புகளை கலைக்க கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான ஜீ.கே.முரளீதரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திறந்த கடிதம் எழுதியிருப்பது தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சியில் புதியதாக பிரித்து உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் கிராம ஊராட்சி, ஒன்றியம், மாவட்ட ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. 2020, ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியானது.
அதில், மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் திமுக 243 இடங்களையும், அதிமுக 214 இடங்களையும், காங்கிரஸ் 15 இடங்களையும், பா.ஜ.க 7 இடங்களையும், தே.மு.தி.க 3 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 7 இடங்களையும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களையும், பா.ம.க தா.ம.க உள்ளிட்ட பிறர் 22 இடங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
அது போல ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் திமுக 2100 இடங்களையும், அதிமுக 1781 இடங்களையும், காங்கிரஸ் 132 இடங்களையும், பா.ஜ.க 85 இடங்களையும், தே.மு.தி.க 99 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 62 இடங்களையும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 33 இடங்களையும், பா.ம.க தா.ம.க உள்ளிட்ட பிறர் 795 இடங்களையும் கைப்பற்றிஉள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், 9 புதிய மாவட்டங்களிலும் தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் நகராட்சி, மாநகராட்சி தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், கடந்த வாரம், இது தொடர்பான வழக்கில், தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை செப்படம்பர் 15 தேதிக்குள் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
அதனால், தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கிராம உள்ளாட்சி தேர்தலும் தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, மாநகராட்சி தேர்தலை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல ஒன்றியங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதால், ஆட்சிக்கு வந்துள்ள திமுக உள்ளாட்சி அமைப்புகளை கலைத்துவிட்டு தமிழ்நாடு முழுவதற்கும் ஒரே நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளன.
இந்த சூழலில்தான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான, ஜீ.கே.முரளீதரன், தமிகத்தில் உள்ளாட்சி அமைப்புகளை கலைக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திறந்த கடிதம் எழுதியிருப்பது தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இது குறித்து ஜீ.கே.முரளீதரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: “தமிழக முதல்வருக்கு வணக்கம்.
தமிழகத்தில் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் மகளிர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சி என்பது அவ்வளவு எளிதில் அளந்து சொல்ல முடியாத அளவிற்கு மிகுந்துள்ளது.
நீங்கள் தேடித்தேடி, பார்த்துப்பார்த்து செய்யும் எல்லா நல்ல திட்டங்களும் முழுதாய் தமிழக மக்களுக்கு சென்று சேர்கிறதா? என்று எவராலும் உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. ஏனெனில், உள்ளாட்சி அமைப்புக்களில் தற்போது பல இடங்கள் எதிர்க்கட்சியான அதிமுக
வசம் இருக்கிறது…
அவர்கள் என்னதான் நீங்கள் நல்லது செய்தாலும் அந்த நல்ல பெயர் உங்களுக்கு கிடைக்க கூடாது என்பதற்காகவே குழப்பம் செய்வார்கள்…. எனவே, தாங்கள் தற்போது உள்ள உள்ளாட்சி நிர்வாகங்களை முழுமையாய் கலைத்துவிடுவதுதான் உத்தமமான செயலாக இருக்கும்….
மேலும், அந்த தேர்தலில் நியாயத்திற்குப் புறம்பாக அதிமுக மந்திரிகள் ஆடிய போங்காட்டங்கள் ஊடகங்களில் பிரசித்திபெற்று பிரசுரமாய் வந்ததை இன்னும் தமிழ் மக்கள் மறக்கவில்லை. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்தமாக, ஒரே நேரத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் தான் நீங்கள் இப்போது நடத்தி வரும் சிறப்பான ஆட்சியை மக்களிடம் கொண்டு செல்ல முடியும்.
இப்போதய அரசின் திட்டங்களுக்கு இன்று பதவியிலுள்ள அதிமுக- வை சேர்ந்த யூனியன் சேர்மன் கவுன்சிலர் மற்றும் தலைவர்கள் தடையாக இருக்கின்றனர்.
உதாரணத்திற்கு, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கோபி யூனியன் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் அவர்கள் கட்சி கூட்டத்தை நடத்துகிறார். இதற்கு அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர்.அங்கு மெஜாரிட்டி அதிமுகவினர் உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ளதால் எதுவும் செய்யமுடியாமல் கை பிசைந்து நிற்கின்றனர்
தொகுதிமக்கள்!
எனவே, தாங்கள் தயைகூர்ந்து இவைகளை கலைத்துவிட்டு முழுமையாய் உள்ளாட்சித்தேர்தல் நடத்திட நடவடிக்கை எடுக்குமாறு தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதனிடயே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் அகில இந்திய பொறுப்பாளர் குண்டு ராவ் ஆகியோர் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளை கலைக்க கோரிக்கை வைத்தார்களா என்ற கேள்வி தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“