2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியை, தி.மு.க கூட்டணியில் சிறப்பாக செயல்பட வைத்து வெற்றி பெற வைத்ததில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரிக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டு நான்கரை ஆண்டுகள் கடந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள், கே.எஸ். அழகிரியை மாற்றிவிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் தேசியத் தலைமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு புதிய தலைவரை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், கோஷ்டி பூசலுக்கு பெயர் போன தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில், புதிய காங்கிரஸ் மாநிலத் தலைவராக தங்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு காய் நகர்த்தி வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தேசியத் தலைமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி எம்.பி, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், மாணிக்கம் தாகூர் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. ஜோதிமணிக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் விருப்பமில்லை என்று கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில், கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முந்தைய பா.ஜ.க அரசு மீது 40% கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு பிரச்சாரங்கலை சமூக ஊடகங்களின் வழியாக மக்களிடையே கொண்டு சென்று வெற்றிக்கு வழிவகுத்ததில் சசிகாந்த் செந்திலுகு பெரும் பங்கு இருக்கிறது.
தமிழ்நாடு பா.ஜ.கா-வில் மூத்த தலைவர்கள் பலர் இருக்க, பா.ஜ.க தேசியத் தலைமை முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலையை தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக நியமித்தது. அதே வழியில், காங்கிரஸ் கட்சியும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்க வாய்ப்பு உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் tசட்டமன்றக் குழுதலைவர் செல்வப் பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செல்வப் பெருந்தகை சட்டமன்றத்திலும் சட்டமன்றத்துக்கு வெளியேயும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அரசியலில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் தேசியத் தலைமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு புதிய தலைவரை நியமிக்க திட்டமிட்டுள்ளது உண்மைதான். ஆனால், அந்த பதவிக்கு செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, சசிகாந்த் செந்தில், மாணிக்கம் தாக்கூர் இவர்களில் யார் நியமிக்கப்படுவார்கள் என்பது டெல்லி தலைமைதான். யாராலும் உறுதியாகக் கூற முடியாது என்று தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.