Vijayadharani | Selvaperunthagai: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி. காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.-வான இவர் பா.ஜ.கவில் இணையப்போவதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகியது.
கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று காங்கிரஸ் தலைமை மீது விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகவும், பா.ஜ.கவில் இணையப்போவதாகவும் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வந்தன. ஆனால், இதனை காங்கிரஸ் கட்சி மறுத்து வந்தது.
பா.ஜ.க-வுக்கு தாவிய விஜய் தரணி
இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த விஜயதரணி எம்.எல்.ஏ காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்தார்.
'எம்.எல்.ஏ பதவியை இழப்பார்' - செல்வப் பெருந்தகை
இந்நிலையில், விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்தது தொடர்பாக பேசியுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்தது துரதிர்ஷ்டவசமானது. மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு விஜயதாரணி திரும்பி வருவார். விஜயதாரணி மக்கள் பணியை செய்யவில்லை என்றாலும் அவரை மரியாதையுடன் நடத்தினோம். ஒருவர் பா.ஜ.க-வில் இணைந்ததால் இந்தியா கூட்டணிக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. விஜயதாரணி மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் தனது எம்.எல்.ஏ பதவியை இழப்பார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“