திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றபோது கைகலப்பு நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தியது மற்றும் பால், தயிர், அரிசி போன்ற அத்தியவசியமான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை விதித்து மக்களுக்கு சிரமத்தை உண்டாக்கும் மக்கள் விரோத மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ், மாநில பொதுச் செயலாளர் வக்கீல் இளங்கோ, வக்கீல் சரவணன், ராஜலிங்கம், கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் மாவட்ட தலைவர் ஜவகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் அருணாச்சல மன்றம் திரும்பினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி தயாரானபோது, மாநில பொதுச்செயலாளர் வக்கீல் சரவணன் மாவட்ட தலைவரின் அருகில் செல்ல முயன்றுள்ளார். அதற்கு அங்கு நின்ற ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து தள்ளி நிற்குமாறு கூறினார்.
இதனால் சற்று வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், மாவட்ட தலைவர் மற்றுமு் மாநில பொதுச்செயலாளரின் ஆதராவாகள் என இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் பெரிய கைகலப்பாக மாறியது. இதனால்இரு தரப்பினரும் சரமாரியாக மோதிக்கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோஷ்டி மோதலில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
அருணாச்சல மன்றத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
க. சண்முகவடிவேல்