திண்டுக்கல் சிறுமலையில் சி.பி.எம் தொண்டர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு இன்று வருகை தந்த மாநில செயலாளர் பெ.சண்முகம் திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய நாட்டில் உள்ள தொழிலாளி வர்க்கம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக போராடி பெற்ற சலுகைகளை தொழிற் சங்க சட்டங்களையெல்லாம் முதலாளிகளுக்கு ஆதரவாக, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக தூள் தூளாக்கிவிட்டு தொழிலாளர்களுக்கு விரோதமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள 4 தொகுப்புச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது மோடி அரசு. தொழிலாளர்களின் தலைக்கு மேல், தொங்கும் கத்தியாக உள்ளன இந்த சட்டங்கள்.
இந்த 4 தொகுப்பு சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும். இந்தியாவில் உள்ள தொழிற்சங்கங்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக இந்த சட்டம் இன்னும் அமுலாக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே தான் இந்த 4 தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வரை சிபிஎம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். ஒன்றிய அரசின் பல்வேறு மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே, இந்த தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தயக்கம் காட்டக்கூடாது என்று வலியுறுத்துகிறோம்.
வருகிற மே.20ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்தில் திமுக தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. தமிழ்நாட்டு மக்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு பேராதரவை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காஷ்மீர் மாநிலம் பெகல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் வன்மையான கண்டனத்திற்கு உரியது. அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டதை சகித்துக்கொள்ள முடியாது. தீவிரவாதிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எங்கள் கட்சியின் ஆதரவு உண்டு என தெரிவித்துள்ளோம்.
நமது நாட்டின் பிரதமர் அனைத்து கட்சி கூட்டங்களில் பங்கேற்காதது சரியல்ல. இந்திய மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தீவிரவாதம் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்று நாடே பேசிக்கொண்டிருக்கும் போது ஏன் பிரதமர் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தை நடத்தி பெகல்காம் தாக்குதல் தொடர்பாக ஒரு முழுமையான விவாதம் நடத்தப்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா? 200 கி.மீ தூரத்தில் ஊடுருவி எப்படி தாக்குதல் நடத்தினார்கள் என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் கூட்ட வேண்டும்.
தற்போது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய அரசாங்கம் துல்லிய தாக்குதல் நடத்தியுள்ளது. அதே நேரத்தில் எதிர்தாக்குதலை பாகிஸ்தான் துவங்கியிருக்கிறார்கள். மக்கள் மத்தியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எல்லா மாநிலங்களிலும் 250க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒன்றிய அரசு போர் ஒத்திகை நடத்துவது போர் பதற்றத்தை உருவாக்கும் முயற்சியாக நாங்கள் பார்க்கிறோம். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடத்துவது அவசியம். அதே சமயத்தில் நாடு முழுவதும் போர் பதற்றத்தை உருவாக்குவதை ஒன்றிய அரசு தவிர்க்க வேண்டும்.
ஒன்றிய பாஜக அரசு கடைபிடிக்கக்கூடிய வகுப்பு வாத, மற்றும் வெறுப்பு அரசியலுக்கு எதிராகவும், நாட்டு மக்களிடையே மதச் சார்ப்பின்மை, மக்கள் ஒற்றுமைக்கு ஆதரவாகவும். தமிழ்நாட்டில் வருகிற ஜுன் 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை 10 நாட்கள் நடைப்பயணம் நடத்த உள்ளோம்.
நிரந்தர ஊதியம், நிரந்தர பணியிடம் ஒன்றிய பாஜக அரசு கடைபிடிக்கும் தாராளமயம், தனியார் மய கொள்கைகளைத்தான் தமிழ்நாடு அரசு கடைபிடிக்கிறது. அதன் விளைவாக நிரந்தர பணியிடங்களுக்கு பணி நியமனம் இல்லாமல் அனைத்து பணியிடங்களுக்கும் ஒப்பந்த முறையிலும், அவுட் சோர்ஸ் முறையிலும், தொகுப்பு ஊதியம், மதிப்பூதியம் என்ற பெயரில் தமிழக அரசு பணியிடங்களில் பணியமர்த்தப்படுகிறது. நிரந்தர பணியிடங்களை எதிர்பார்க்கும் இளைஞர்கள் மத்தியில் ஒரு அதிர்ப்தி ஏற்பட்டுள்ளது. வேலை பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். எனவே தமிழக அரசு நிரந்தர பணியிட நியமனமும், நிரந்தர ஊதியமும் வழங்கிட தமிழக அரசு முன்வரவேண்டும். அரசின்
பஞ்சமி நிலம் மீட்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து மீட்க வேண்டும். இதற்கான நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. சட்ட ரீதியாக பஞ்சமி நிலங்களை மீட்க எந்த வித இடையூறும் இல்லை. ஆனால் ஏக்கர் நிலம் கூட தமிழகத்தில் மீட்கப்படவில்லை. பட்டியல் சமூகத்தினருக்கு மட்டுமே உரிமைப்பட்ட இந்த பஞ்சமி நிலங்கள் தமிழ் நாடு முழுவதும் உள்ளன. அவை மீட்கப்பட வேண்டும். அதே போல் நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும். குடிமனைப்பட்டா கோரி லட்;சணக்கணக்கான குடும்பங்கள் காத்திருக்கின்றன.
நீர்நிலையில் குடியிருப்பவர்கள் அகதிகள் அல்ல, நீர்நிலைப் புறம் போக்கில் வசிப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்றுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக முதல்வர் உள்ளிட்ட மற்ற அமைச்சர்களிடம் கூறும் போது நீதி மன்ற உத்தரவுகள் இருக்கும் போது நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். ஆனால் அதே வேளையில் தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள். அரசின் அடுக்குமாடி குடியிருப்புகள் நீர் நிலை புறம் போக்குகளில் கட்டப்படுகின்றன.
அதே நேரத்தில் மக்கள் 2 தலைமுறை 3 தலைமுறைகள் குடியிருப்பவர்களை நீதி மன்ற உத்தரவை காரணம் காட்டி அப்புறப்படுத்துவது எப்படி பொருத்தமானதாக இருக்கும். மாற்று ஏற்பாடு கூட இல்லாமல் அப்புறப்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் அகதிகள் இல்லை. அந்த மக்களுக்கு குடியுரிமை உண்டு என்ற அடிப்படையில் அரசின் அடிப்படைகொள்கையில் மாற்றம் வேண்டும் என்று
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச்செயலாளர் கே.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.