/tamil-ie/media/media_files/uploads/2022/10/Elon-Musk-File.jpg)
எலான் மஸ்க் பெயர் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி கிரிப்டோகரன்சி மோசடிகள் நடப்பதாக தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அவர்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதில், எலான் மஸ்க் மற்றும் அவரது தந்தை எரோல் மஸ்க் கிரிப்டோகரன்சி முதலீடுகளை ஆதரிப்பதாகப் பரவும் போலி விளம்பரங்களை நம்பி பலர் பணத்தை இழந்துள்ளனர். இதுவரை 26 போலி இன்ஸ்டாகிராம் கணக்குகளும், 14 போலி இணையதளங்களும் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டு வருகின்றன. எலான் மஸ்க் எந்த கிரிப்டோகரன்சி செயலியையோ அல்லது இணையதளத்தையோ ஆதரிக்கவில்லை. அதிக லாபம் தரும் விளம்பரங்கள் மோசடியாக இருக்கலாம்.
மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், சைபர் கிரைம் காவல்துறை பொதுமக்களுக்கு சில எச்சரிக்கைகளையும் அறிவுரைகளையும் வழங்கியுள்ளது.
அதன்படி இதுப்போன்ற குற்றங்களில் சிக்காமல் இருக்க,
1. அதிக லாபம் தருவதாகக் கூறும் வாய்ப்புகளை நம்ப வேண்டாம்.
2. பிரபலங்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைக் கொண்டு வரும் விளம்பரங்கள் போலியானவையாக இருக்கலாம்.
3. மூலமற்ற இணையதளங்கள் மற்றும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
4. அரசு மற்றும் நிதி ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தகவல்களைச் சரிபார்க்கவும்.
5. அறியாத இணையதளங்களில் தனிப்பட்ட மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பகிர வேண்டாம்.
6. பதிவுசெய்யப்பட்ட மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோ பரிமாற்றங்களை மட்டும் பயன்படுத்தவும்.
7. சந்தேகமான செயல்பாடுகளை கண்டால் 1930 என்ற இலவச உதவி எண்ணை அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யவும்.
சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.