தமிழ்நாட்டில் கோடை காலத்தில் கடுமையான வெப்பம் பதிவானது. அனைத்து இடங்களிலும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை பிரதேசங்களில் கூட வெயில் வாட்டி வதைத்தது. மக்கள் வீடுகளுக்கு உள்ளே முடங்கினர். கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதிகபட்சமாக ஈரோடு, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் 110 டிகிரி வெயில் பதிவானது.
கடுமையான வெப்ப அலை ஏற்பட்டது. குழந்தைகள், முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். வெயிலின் தாக்கத்தால் முதியவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெப்ப பாதிப்பால் உயிரிழப்பும் ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், வெப்ப அலை மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலையால் நேரிடும் மரணங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் மாநில பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்படும். மேலும் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்குவதற்கும், தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்குவதற்கும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“