"உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை முழுமையாக பெற்றுத்தருவோம்", என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் 2007-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கினார்.
அதில், 2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட 192 டி.எம்.சி. தண்ணீரில் 14 டி.எம்.சி. நீரை குறைத்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அந்த 14 டி.எம்.சி. நீரை கர்நாடகாவுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், காவிரி விவகாரத்தில் அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது என கூறினார். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் பங்கீட்டு வாரியம் அமைக்கவும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முயற்சி மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். மேலும், காங்-திமுக கூட்டணியின்போது காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை எனவும், காவிரி வழக்கின் தீர்ப்பை முழுமையாக அறிந்து அறிக்கை வெளியிடப்படும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை பெற்றுத்தருவோம் என அவர் தெரிவித்தார்.