சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி துவங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரியை விட்டு பாடப்பட்டது. இதேபோல், நிகழ்ச்சியின் இறுதியில் பாடப்பட்ட தேசிய கீத பாடலில் திராவிடம் சொல் தவிர்க்கப்பட்டது. இதனால், பெரும் சர்ச்சை கிளம்பியது.
இந்த விவகாரத்திற்கும் தமிழக ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. இதனிடையே, நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாக டிடி தமிழ் தொலைக்காட்சி கூறியது. இருப்பினும், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை.
இந்நிலையி, தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக ஈரோட்டில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'திராவிடல் நல் திருநாடு' என்கிற வார்த்தையை விட்டுவிட்டார்கள் அல்லது தூக்கி விட்டார்கள் என்பது தானே உங்களுக்கு பிரச்சினை. அதே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஆரியங்கோல் வழக்கொழிந்து என்ற வார்த்தையை தூக்கியது யார்?. கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட வார்த்தைகள் அடங்கிய அந்த வரியை தூக்கியது யார்?. திராவிடன் என்ற ஒரு சொல்லை எடுத்ததற்கே இப்படி குதிக்கிறீர்கள்.
50 ஆயிரம் ஆண்டுகளுன் முன் தோன்றிய என் தாய்மொழி தமிழை கொன்று சமாதி கட்டி வைத்திருக்கிறீர்கள். கொத்துக்கொத்தாக, லட்சக்கணக்கான என் இன மக்கள் சாவும் போது கொதித்து வராத கோவம், ஆந்திர காடுகளில் எங்களை சுட்டுக்கொல்லும் போது வராத கோபம், அன்னை தமிழ் மொழி செத்துவிழும் போது வராத கோபம், இப்போது ஏன் வருகிறது?இதே ஆளுநர் 100 ரூபாய் வெளியிடும் போது கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டீர்கள்.
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இருக்காது. அப்போது என்ன செய்வீர்கள். இது எங்கள் நாடு. எங்கே இருக்கிறது திராவிடம்?. எங்கிருந்து வந்தது திராவிடம் என்ற சொல்?. திராவிடம் என்றால் என்ன? கேரளாவில் பஞ்ச திராவிடர் மாநாடு நடந்ததா இல்லையா?. அதில் ஏன் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பங்கேற்க வேண்டும். அவர் ஏன் ராகுல் டிராவிட் என அழைக்கப்படுகிறார். நான் எப்படி திராவிடர் ஆனேன். திராவிடம் என்பது சமஸ்கிருதம் சொல். மாடல் என்பது ஆங்கில சொல்." என்று அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர். தி.மு.க-வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தொட்டுக் கூட பார்க்க முடியாது.
தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க பல்வேறு வகைகளில் முயற்சி செய்கிறார்கள். நேரடியாக இந்தியை திணிக்க இயலாத காரணத்தால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குகின்றனர். தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சிக்கு பலர் துணை போகின்றனர்." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.