டிஜிபி சைலேந்திர பாபு புத்தாண்டு வாழ்த்து வீடியோ; இளைஞர்களுக்கு சர்ப்ரைஸ் நியூஸ்!

தொழில் ரீதியான கலையைக் கற்றுக் கொள்வது மிக முக்கியம் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்

TN DGP Sylendra Babu wants youth learn new skill this year: இளைஞர்கள் ஏதாவது ஒரு கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக பெரிய அளவிலான கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு பிறப்பையொட்டி, முதல்வர், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டு ரொம்ப அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். புத்தாண்டு தினத்தில், கடந்த ஆண்டு எப்படி இருந்தது, கடந்த ஆண்டு என்னவெல்லாம் செய்தோம், எதையெல்லாம் செய்ய தவறினோம். வரக்கூடிய ஆண்டில் இனி என்னவெல்லாம் செய்ய வேண்டும். என்னென்ன பழக்கங்களை புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும். எந்த பழங்களைக் கைவிட வேண்டும் என்று சிந்திக்கக் கூடிய, முடிவெடுக்கக் கூடிய நாள் தான் இந்த புத்தாண்டு.

இளைஞர்களை பொறுத்தவரை இந்த புத்தாண்டில் ஒரு செய்தி இருக்கிறது. உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நடந்த முடிந்த 2021ல் தொழில் ரீதியாக என்ன கற்றுக் கொண்டீர்கள்? ஏதாவது ஒரு வித்தையை கற்றுக் கொண்டீர்களா? விமானம் ஓட்டுதல், கார் ஓட்டுதல், அக்கவுண்டிங் கற்றுக் கொண்டீர்களா? இல்ல, அணுவை உடைக்கக்கூடிய அறிவியலை கற்றுக் கொண்டீர்களா? பேச, எழுத, வாசிக்க கற்றுக் கொண்டீர்களா?, எல்லாவற்றுக்கும் மேல சிந்திக்க கற்றுக் கொண்டீர்களா? இந்த கேள்விகளை நீங்கள் கேட்க வேண்டும். ஏதாவது ஒரு நூல் படித்தீர்களா? ஒரு புதிய மொழியை கற்றுக் கொண்டீர்களா? இப்படியான அடிப்படையான கேள்விகளை கேட்டுவிட்டு, இளைஞர்கள் இந்த புத்தாண்டில் செய்ய வேண்டிய மிக முக்கிய வேலை ஏதாவது ஒரு கலையை கற்றுக் கொள்ள வேண்டும். அது தொழில்ரீதியாக இருக்க வேண்டும். இதுதான் இளைஞர்களின் வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கும்.

நம்முடைய வாழ்க்கையின் மிகப்பெரிய பகுதியை நாம் செய்யும் தொழில் தான் தீர்மானிக்கிறது. செய்யும் தொழிலே தெய்வம். செய்யும் தொழில்தான் நமக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும். மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு டிஜிபி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது. பலரும் மறுபதிவிட்டுள்ளனர். டிஜிபி சைலேந்திர பாபு, இளைஞர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். உடல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய அவர், உடற்பயிற்சி கூடங்களில் மற்றும் சைக்கிளிங் பயணங்களின்போது உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் புத்தாண்டு தினத்தில் இளைஞர்கள் ஏதேனும் ஒரு தொழிற்கலையை கற்க வலியுறுத்தியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn dgp sylendra babu wants youth learn new skill this year

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com