அரசியல் பேசினீர்களா? பிரதமரை சந்தீப்பீர்களா? கேள்விகளால் துளைத்தெடுத்த செய்தியாளர்கள்.. அமித் ஷா சந்திப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி | Indian Express Tamil

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த இ.பி.எஸ்: பேசியது என்ன?

டெல்லியில் பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் எங்குப் பார்த்தாலும் கலெக்ஷன், கமிஷன், கரெப்ஷன் எனப் போய்கொண்டிருக்கிறது என திமுக அரசு மீது குற்றஞ்சாட்டினார்.

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த இ.பி.எஸ்: பேசியது என்ன?
உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு கோப்பு புகைப்படம்.

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.20) சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், “உள்துறை அமைச்சருடன் மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு இது. தமிழ்நாட்டில் இரண்டு முக்கிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நான் முதலமைச்சராக இருந்த போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன்.

ஒன்று காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டம். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டிற்கு தேவையான குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு தேவையான பாசன நீர் கிடைக்கும்.
ஆகவே, இந்தத் திட்டத்தை வேகப்படுத்தி செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். மற்றொன்று ஜெயலலிதா அம்மா ஆட்சிக் காலத்தில், பாரத பிரதமரிடம் நடந்தாள் வாழி காவிரி என்ற திட்டத்தை முன்வைத்தோம்.

காவிரியில் கலக்கும் மாசு நீரை கட்டுப்படுத்தி சுத்தப்படுத்தும் திட்டம் இது. இந்தத் திட்டம் குடியரசுத் தலைவர் உரையிலும் இடம் பெற்றது. இதனையும் வேகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
தற்போது தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி போதைப் பொருள்கள் கிடைக்கின்றன. இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.

மாநிலத்தில் போதைப் பொருள், கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்துவது போலீசாரின் கடமை. இது பற்றி நாங்கள் ஏற்கனவே முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தற்போது உள்துறை அமைச்சர் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளோம்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. மாநிலத்தில் எங்குப் பார்த்தாலும் கலெக்ஷன், கமிஷன், கரெப்ஷன் எனப் போய்கொண்டிருக்கிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி, அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான கேள்விக்கு அது நீதிமன்றத்தில் இருப்பதால் கருத்து சொல்ல விரும்பவில்லை” என்றார்.

தொடர்ந்து ஓ.பி.எஸ்., தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்தக் கேள்வியை அவரிடமே கேளுங்கள் எனக் கூறினார்.

மின்கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை சுட்டிக் காட்டிய எடப்பாடி, கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டும் வரும் இச்சூழலில் மின்சார கட்டணம் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மின்சார கட்டணம் உயர்வு பாதிப்பில்லை எனக் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “எதிர்க்கட்சியாக இருந்தபோது போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் தற்போது பாதிப்பில்லை என்கிறார்கள்” எனப் பதிலளித்தார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் திட்டம் உள்ளதா? அதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதா எனச் செய்தியாளர்கள் கேட்டனர். “அதற்கு தற்போது இல்லை” எனப் பதிலளித்தார்.
அப்போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி., சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn dmk government runs collection commission and corruption says former cm edapadi k palaniswamy