தர்மபுரி மாவட்டம், ராமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கே. பாலாஜி, வகுப்புகளை நடத்த தனக்குப் பதிலாக வேறொருவரை நியமித்ததால், அவரை 'சஸ்பெண்ட்' செய்து பள்ளிக்கல்வித் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், மற்றொரு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை மிகப்படுத்திக் காட்டிய தலைமை ஆசிரியை மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் பள்ளி நிர்வாகக் குழு (எஸ்.எம்.சி) உறுப்பினர்கள் கூட்டம் நடத்திய பின்னர், ஆசிரியர் கே. பாலாஜி ஒழுங்கீனமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் ராமியம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, அரூர் மாவட்ட கல்வி அதிகாரி சின்னமதுவிடம், பள்ளியின் ஆங்கில ஆசிரியர் கே. பாலாஜி மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தின்போது, ஆசிரியர் 'பாலாஜி பள்ளிக்கு சரிவர வருவதில்லை என்றும் அவருக்குப் பதில் வேறொரு ஆசிரியரை நியமித்துள்ளார் என்றும் இத்தகைய் முறைகேடுகளில் ஈடுபடும் ஆசிரியர் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகார் அளித்தனர்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், ஆசிரியர் பாலாஜி வகுப்புகளை நடத்த தனக்கு பதிலாக ஒருவரை நியமித்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் ஆசிரியர் பாலாஜி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையில், செப்டம்பர் மாதம், வில்லிவாக்கம் கல்வி வட்டத்தில் மாணவர்களின் சேர்க்கை விவரங்களை பொய்யாகக் காட்டியதாகவும், பம்மதுகுளம் பள்ளியின் மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரத்தை தவறாக நிர்ணயித்ததற்காகவும் வட்டார கல்வி அலுவலர் (பி.இ.ஓ) மேரி ஜோசஃப்பின் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியை லாதா ஆகிய இருவரையும் பள்ளிக்கல்வித் துறை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பள்ளியில் படிக்கும் 266 மாணவர்களுக்கு தற்போது 16 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இருப்பினும், இரண்டு கல்வி ஊழியர்களும் தரவுகளை புனைந்து கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (EMIS) போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை 566 என மிகைப்படுத்தியுள்ளனர்.
மேலும், இதே போல, மாணவர் சேர்க்கை மற்றும் மாணவர் - ஆசிரியர் விகிதத்தில் நடந்த முறைகேடு குறித்து ஆய்வு செய்யாத விழுப்புரம் வட்டாரக் கல்வி அலுவலரை (பி.இ.ஓ) பள்ளிக்கல்வித் துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்துள்ளதால் பள்ளிக்கல்வித் துறை முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.