தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் மறுமலர்ச்சி அடைந்து வருவதாகவும், கல்வித் துறையில் புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தி தமிழகம் பெரும் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்தார்.
பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம், மாபெரும் திறன் மேம்பாட்டிற்காகச் செயல்படும் 'நான் முதல்வன்' திட்டம், கல்வியில் உள்ள கற்றல் இடைவெளிகளைச் சமாளிப்பதற்கான ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம், ஆகியவை தமிழகத்தின் கல்வி முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளாகும், என்று ஸ்டாலின் கூறினார்.
இதையும் படியுங்கள்: ரூ.21 லட்சம் அபேஸ்; இந்தியர்களை குறிவைத்து ஆப்பிரிக்க கும்பல் மோசடி; டி.ஜி.பி எச்சரிக்கை
”2021ல் தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகம் மறுமலர்ச்சியை சந்தித்து வருகிறது. கல்வியில் நாம் பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறோம், கல்வியை அனைவருக்கும் அணுகக்கூடியதாக ஆக்குகிறோம், அதை உறுதி செய்கிறோம்,” என்று 100 அரசு பள்ளிகளின் மாணவர்களுக்கான பொறுப்பான காவல்துறை முயற்சிகளில் (SIRPI) மாணவர்களின் பாராட்டு விழாவில் ஸ்டாலின் பேசினார்.
“எனது பள்ளி நாட்களை நீங்கள் எனக்கு நினைவூட்டுகிறீர்கள்... இந்த நிகழ்வு உங்களுக்கு வாழ்க்கை சார்ந்த திறன்கள் குறித்த பயிற்சியின் நிறைவைக் குறிக்கிறது. இந்தியாவை சமத்துவ நாடாக மாற்றுவது உங்கள் கைகளில் உள்ளது” என்று ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கூடியிருந்த 8ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களைச் சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மாணவர்கள் பள்ளிக் கல்வியோடு நின்றுவிடாமல், உயர்கல்வி பயின்று பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக வேண்டும் என்றும், புத்தகங்கள் என்ற எல்லையைத் தாண்டி சமூகத்தைப் பற்றிய அறிவைப் பெற வேண்டும் என்றும் அவர் மாணவர்களை வலியுறுத்தினார். அதற்கு தி.மு.க அரசு உறுதுணையாக இருக்கும் என்று ஸ்டாலின் உறுதியளித்தார்.
தரமான கல்வியை வழங்குவதில் நாட்டிலேயே இரண்டாவது சிறந்த மாநிலமாக தமிழகம் இருப்பதாகக் கூறிய ஸ்டாலின், நாட்டிலேயே முதன்மை மாநிலமாகத் திகழும் முயற்சியில் பள்ளிக் கல்வித் துறை ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். பள்ளிக் கல்வித் துறை 100 சதவீத கல்வி வழங்கலை எட்ட வேண்டும் என்பதோடு, கற்றலில் சிரமம் உள்ளவர்களைச் சென்றடையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.
போதையில்லா சமுதாயத்தை உருவாக்குவதில் மாணவர்கள் தங்களை முழு மனதுடன் ஈடுபடுத்த வேண்டும் என்று ஸ்டாலின் அன்புடன் வேண்டுகோள் விடுத்தார்.
"மாணவர்களை எதிர்கால பொறுப்புள்ள மற்றும் கண்ணியமான குடிமக்களாக வளர்ப்பது அரசின் கடமையாக நான் கருதுகிறேன். நான் முதல்வன் திட்டம் தலைமுறை தலைமுறையாக நீடிக்கும் பல நன்மைகளை கொண்டுள்ளது,'' என்று ஸ்டாலின் கூறினார்.
சிற்பி திட்டம் பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுமார் 5,000 மாணவர்கள் தற்காப்புப் பயிற்சி பெற்றனர், சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து விழிப்புணர்வு பெற்றனர், அவர்களிடம் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும், பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அவர்கள் 5,000 மரக்கன்றுகளை நட்டனர் மற்றும் குறுகிய ரயில் பயணத்தை முடித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மேயர் பிரியா ராஜன், உள்துறை செயலாளர் அமுதா, காவல்துறை இயக்குநர் சி.சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil