தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனது குடியரசு தின உரையில், "மொத்த-சேர்க்கை-விகிதத்தில், தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருப்பது மிகுந்த நிறைவை அளிக்கிறது. ஆனால் குறிப்பாக, பள்ளிகளில் மாணவர்களின் கற்றல்-வெளிப்பாடு என்று காணும் போது, இது கடைத்தட்டில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது.
நமது அரசுப்பள்ளிகளில் இருக்கும் கற்றல் நிலை தொடர்பாக, கடந்த சில ஆண்டுகளின் கல்வி அறிக்கைகளின் வருடாந்தர நிலை, மிகவும் கவலையளிக்கும் ஓர் உண்மையை வெளிப்படுத்துகிறது. நமது அரசுப்பள்ளிகளில் இருக்கும் சுமார் 75 சதவீதம் மாணவர்களால், இரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகங்களைக் கூட, சரிவரப் படிக்க இயலவில்லை என்பதோடு, 11 முதல் 99 வரையிலான இரண்டு இலக்க எண்களைக் கூட, அவர்களால் அடையாளம் காண முடிவதில்லை.
இரண்டு இலக்க கூட்டல்-கழித்தல்களைக் கூட அவர்களால் செய்ய முடியவில்லை. அரசுப்பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழைகள் படிப்பதால், அரசுப்பள்ளிகளில் கற்றலில் ஏற்பட்டிருக்கும் இந்த செங்குத்தான சரிவு, ஏழைகளின் எதிர்காலத்தை மேலும் ஆபத்துக்குள்ளாக்குவதோடு, நீண்டகால சமூக மற்றும் பொருளாதார அநீதி அவர்களுக்கு இழைக்கப்படுவதை இது மேலும் அதிகப்படுத்தும்."என்று கூறியிருந்தார்.
கண்டனம்
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது மாணவர்களையும், ஆசியர்களையும் குறைவாக பேசியதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "ஆளுநர் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு அவைத்தலைவராக இருப்பவர் என நினைத்தேன். ஆனால், ஒரு இயக்கத்திற்கு அவைத்தலைவராக இருப்பது போல் செய்தியைக் கொடுத்துள்ளார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர் கூறியிருந்தால் அதனை ஏற்றுக் கொள்ளவேண்டும். யாராக இருந்தாலும் அதில் மறுப்பு தெரிவிக்கக்கூடாது. அதில் அரசியல் பார்க்கக் கூடாது.
கற்றல் விழுக்காடு குறைவாக இருந்தால், அதனை எற்றுக் கொண்டு மேம்படுத்த முயல்வோம். அதற்கான புதிய திட்டங்களை நாங்கள் சொல்லவோம். ஆனால், இன்று ஒட்டுமொத்த இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அப்படி இருக்கும்போது, 11 முதல் 99 வரை எண்களை கூட்ட முடியவில்லை, கழிக்க முடியவில்லை, பெருக்க தெரிவதில்லை என்று சொல்வது, இரண்டு விதமாக தாக்கத்தை எங்கள் பிள்ளைகள் மீது ஏற்படுத்தும்.
ஒன்று எங்கள் பிள்ளைகள் மீது குற்றம் சாட்டுவது, மற்றொன்று பிள்ளைகளுக்கு பாடம் நடத்தும் எனது ஆசியர்களை தவறாகச் சொல்வது என்றாகத் தான் பார்க்கிறேன். அதற்கு ஆளுநருக்கு எனது கண்டணத்தைத் தெரிவிக்கிறேன். இதுபற்றி நாங்கள் பதில் சொல்வதைக் காட்டிலும், பிள்ளைகளின் பெற்றோர் பதில் சொல்லட்டும்.
இன்று நேரடி சவால் மூலம் தலைமை ஆசிரியை தங்களது பள்ளிகளில் சோதனை செய்ய அழைப்பு விடுத்தார். அதனை நேரடியாக நான் சென்று பார்த்தேன். இதேபோல், 2500 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நேரடி சவாலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். குடியரசு தின விழாவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வந்த ஊர்தி தான், ஆளுநரின் பேச்சுக்கு பதில்." என்று அவர் கூறியுள்ளார்.