/indian-express-tamil/media/media_files/4JczQPIJJTpwghXw93ia.jpg)
"இடைநிலைப்பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளப்படவில்லை. பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை." என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
தமிழக துணை முதல்வரும், தி.மு.க இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பாக மூத்த திமுக முன்னோடிகள் 47 நபர்களுக்கு பொற்கிழி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொற்கிழி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மகேஷ் தெரிவித்ததாவது:-
உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு, குறிப்பாக, தி.மு.க மூத்த முன்னோடிகளுக்கு, திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை மக்களுக்கு பயனுள்ள விதத்தில் கொண்டாடி வருகிறோம். தற்போது அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
தற்போது BT Assistant 3000 ஆசிரியருக்கான தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவடைந்து, அவர்களுக்கு பணி வழங்கப்பட உள்ளது. இந்த சூழலில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக 3000 பேரையும் பணி நியமனம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது உண்மைதான்.
இடைநிலைப்பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளப்படவில்லை. பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது நாங்கள் அவர்களுக்கும் சேர்த்தே தேர்வு நடத்தியுள்ளோம். முதல்வரின் உத்தரவை பெற்று அவர்களுக்கும் மிக விரைவில் பணி வழங்கப்படும்.
வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுவதாக கூறியுள்ளது குறித்து இரண்டு தலைவர்களும் பேசி, தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். எனவே, இதில் நாங்கள் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.