ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் , தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பாஜக, அதிமுக, பாமக, தாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் வாக்கு சேகரித்தார்.
இதில் திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக மாநிலத்தலைவர் முருகன் அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், பிரதமர் மோடியின் அயராத உழைப்பே நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணம் என்றார்.
வலுவான நம்முடைய கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற நாட்டு மக்களின் கனவை நனவாக்க ஒரு நிமிடம் கூட வீணாக்காமல், பிரதமர் மோடி உழைத்து கொண்டிருக்கிறார் என்று பிரதமரை பாராட்டி பேசினார்.
தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை மத்திய உடனடியாக செய்து வருகிறது. இது மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பாதலேயே கிடைக்கிறது. சுமார் 5200 கி.மீ நீள சாலைகளை ஒரு லட்சத்து ஐயாயிரம் கோடியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலமாக நிறைவேற்றி, உட்கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக உருவாக்கி இருக்கிறார்கள்.
தமிழ்நாடு நீர்பற்றாக்குறை உள்ள மாநிலம் என்பதால், கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும் போது தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை நீங்கும் எனவே இதனை பிரதமர் அவர்கள் நிறைவேற்றித்தர வேண்டுகோள் வைத்தார்.
மத்திய அரசின், ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் தமிழக நகரங்கள் மேம்பாடு அடைந்து வருகின்றன.
சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் தடையில்லா மின்சாரத்தின் காரணமாக முதலீட்டாளர்கள் எல்லாம் தமிழகம் நோக்கி வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் மூன்று லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகள் வந்துள்ளன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்து லட்சத்திற்கு மேற்பட்டோர்க்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளோம்.
கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் நெடுநாள் கோரிக்கையான அத்திகடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.
சுமார் ரூ.1652 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நொய்யல் ஆறு செழுமைபடுத்தும் பணி சுமார் ரூ.230 கோடியில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. கீழ் பவானி ஆறு பாசனத் திட்டம் ரூ.930 கோடியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
ஒட்டன்சத்திரம், தாராபுரம், அவினாசி பாளையம் நான்கு வழிச்சாலை ரூ. 724 கோடியில் செயல்படுத்தபட்டு இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு மேம்பாட்டுத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு கலைக்கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் 2011ல் உயர்கல்வியில் சேர்வோர் எண்ணிக்கை நூற்றுக்கு 34 ஆக இருந்தது இப்போது நூற்றுக்கு 49 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் விஞ்ஞான கல்வியை முன்னெடுக்கும் பொருட்டு 52,31,000 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித்திட்டம் மூலம் 12,51,000 பேர் பயனடைந்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்தோம். கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனைகளை அதிக அளவில் செயதது இந்தியாவிலே தமிழக அரசுதான். மேலும், அந்த இக்கட்டான காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் ரேசன் பொருட்களை இலவசமாக வழங்கியுள்ளோம்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது,
சுதந்திரத்திற்குப்பின் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு இந்தியாவை சீர்குலைத்திருக்கிறது. எவ்வித வளர்ச்சி பணிகளும் இல்லாமல் நாட்டை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டது. திமுக காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்து தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு அனுமதியளித்தது.
ஜல்லிக்கட்டு நாயகன் நான் அல்ல பிரதமர் மோடியே.
ஜல்லிக்கட்டுக்கான தடையை திமுக- காங்கிரஸ் கூட்டணிதான் கொண்டுவந்தார்கள். தடையை நீக்க மெரினாவில் 15 லட்சம் பேர் போராட்டம் நடத்தினார்கள். வெளிநாடுகளிலும் இதற்கு வெளிநாடுகளிலும் பரவியது. முதல்வராக இருந்த நான் பிரதமர் மோடியிடம் தெரிவித்தபோது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கினார்கள்.
விலையில்லா அரிசி, வீடு கட்டும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், போன்ற திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்துகிறது. கடந்த, தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். திமுக 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறி ஏமாற்றியது. ஆனால் நாங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil