திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சட்டசபை தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படை குழுவினர், பாளையம்கோட்டை டக்கம்மாள்புரம் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அதில் ரூபாய் 12 கோடியே 89 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்தது தெரிய வந்தது.
அப்போது, அவர்களிடம் விசாரித்தபோது மதுரையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பல்வேறு நகை கடைகளுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். மேலும் அதற்கு உரிய ஆவணங்களை காட்டினர். உடனே பறக்கும் படையினர் ஆவணங்களை சரிபார்த்தனர்
இருப்பினும், ரூ. 13 கோடி மதிப்பிலான நகைகள் என்பதால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து அந்த நகைகள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்த வருமான வரித்துறையினர், அங்கேயே சரிவர கணக்கிட முடியாததால் அந்த நகைகளோடு வேனை பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு வட்டாட்சியர் செல்வன் மற்றும் பாளையங்கோட்டை சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான கண்ணன் ஆகியோர் அந்த நகைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னிலையில் வருமான வரித்துறையினர் அந்த நகைகளை ஒவ்வொன்றாக பார்த்து மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆவணங்கள் முறையாக இருக்கும்பட்சத்தில் நகைகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
.
சேலத்தில் ரூ.1.80 கோடி பறிமுதல்
இதேபோல், சேலம் மாவட்டம், சேலம் மேற்கு சட்டசபை தொகுதி, ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் நேற்று காலை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அதில் ரூ.1 கோடியே 80 லட்சம் இருந்தது.
விசாரணையில் கோவையில் உள்ள தனியார் வங்கியில் இருந்து சேலத்தில் உள்ள அந்த வங்கியின் கிளைக்கு பணத்தை கொண்டு வந்தது தெரிய வந்தது. ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் அப்போது ஒப்படைக்கப்படவில்லை. இதனால் பணத்தை பறிமுதல் செயத காவல்துறையினர், சேலம் மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil