/tamil-ie/media/media_files/uploads/2023/07/Amudha-Kovai.jpeg)
வாக்களிக்காத அரசு ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்படும் என தமிழக உள்துறைச் செயலாளர் அமுதா வியாழக்கிழமை சுற்றறிக்கை வெளியிட்ட நிலையில், அதற்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சுற்றறிக்கை மறுநாள் திரும்ப பெறப்பட்டது. மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காத ஊழியர்களின் ஒரு நாள் சாதாரண விடுப்பு (சி.எல்) அல்லது earned leave இ.எல்-ல் விடுப்பு கழிக்கப்படும் என தமிழ்நாடு உள்துறைச் செயலர் பி.அமுதா வியாழக்கிழமை சுற்றறிக்கை வெளியிட்டார். இது ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில் அதை திரும்ப பெற்றார்.
இதுகுறித்து அமுதா ஐ.ஏ.எஸ் கூறுகையில், சுற்றறிக்கை மறுநாளே உடனடியாக திரும்ப பெறப்பட்டது என்று கூறினார். உள்துறைச் செயலர் வியாழக் கிழமை வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், “அனைத்து இரண்டாம் நிலை அதிகாரிகளும் தங்களுக்கு கீழ் உள்ள ஊழியர்கள் சரியாக வாக்களிப்பதை உறுதிசெய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், அவர்கள் OP-1 பிரிவின் விவரங்களைத் தருமாறு கோரப்படும்.
இதனால் அவர்களின் தகுதிக்கு ஏற்ப ஒரு நாளின் CL/EL அவர்களின் விடுப்புக் கணக்கிலிருந்து குறைக்கப்படும். மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 19-ம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் (டி.என்.எஸ்.ஏ) தலைவர் கே.வெங்கடேசன், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் இதுகுறித்து புகார் மனு அளித்தார். அதில், “உள்துறைச் செயலாளரின் சுற்றறிக்கை இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. மேலும், இது தனிநபர்களின் அடிப்படை உரிமைகளில் தலையிடுவதற்கு சமம்.
அவர்களது குடும்ப உறுப்பினர்களைக் கூட வாக்களிக்குமாறு யாராலும் வற்புறுத்த முடியாது என்பதால், ஒரு அரசு ஊழியர் தனது கீழ் பணிபுரியும் ஊழியர்களை வாக்களிக்கத் தவறினால் அவர்களின் விடுமுறைக் கணக்கில் இருந்து CL/EL நீக்கப்படும் என்று மிரட்டுவது அவரது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர வேறில்லை. உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட தங்கள் ஊழியர்களை வாக்களிக்க உத்தரவிட முடியாது என்று வெங்கடேசன் கூறினார், ஏனெனில் தேர்தல் ஆணையம் 49-O விதியின் கீழ் வாக்காளர்களுக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்ய உரிமை அளித்துள்ளது.
இதனால், உள்துறை ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, உள்துறை செயலர் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்து, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்துறை ஊழியர்கள் அச்சமின்றி வாக்களிப்பதையும், தனிநபர்களின் உரிமைகளை உறுதி செய்வதையும் தலைமை தேர்தல் அதிகாரி உறுதி செய்ய வேண்டும்” என்று வெங்கடேசன் அந்த மனுவில் கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.