/indian-express-tamil/media/media_files/q7N13cizPg6mPqIaJX8U.jpg)
அண்ணாமலை, வானதி சீனிவாசன் குற்றச்சாட்டுகளை மறுத்து, தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம்
தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது என்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டுகளை மறுத்து, தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், 2024-24 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திங்கள்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக அரசின் 7 மாபெரும் தமிழ்க்கனவு என்று என்று குறிப்பிடப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசின் பட்ஜெட்டை, ‘மத்திய அரசின் திட்டங்களை டப்பிங் செய்து வெளியிட்ட தி.மு.க.வின் நிதிநிலை அறிக்கை’ என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்தார். அதே போல, பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “மத்திய அரசு அறிவித்த திட்டங்களுக்கு வேறு பெயரை வைக்கும் வகையில் தமிழ்நாடு பட்ஜெட் அமைந்துள்ளது” என்று விமர்சனம் செய்தார்.
தமிழக அரசின் பட்ஜெட் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருந்த வெற்று அறிவிப்புகளையே இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அறிவித்து, மீண்டும் ஒரு முறை தமிழக மக்களை ஏமாற்றி இருக்கிறது தி.மு.க. ஆறுகள் மறுசீரமைப்பு, புதிய பேருந்துகள் என்பவை போன்ற அறிவிப்புகள், ஆண்டுதோறும் பட்ஜெட் அறிக்கையில் மட்டுமே இடம்பெறும் அலங்கார வார்த்தைகள் ஆகிவிட்டனவே தவிர, கடந்த மூன்று ஆண்டுகளாக இவை எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
மத்திய அரசின் நலத் திட்டங்களுக்குத் தங்கள் பெயரை சூட்டிக் கொள்வது தி.மு.க.வுக்குப் புதிதல்ல என்றாலும், தற்போது பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் திட்டங்கள் பெரும்பாலும் மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே. உண்மையில் தி.மு.க அரசு தமிழக மக்களுக்காகக் கொண்டு வந்த நலத் திட்டங்கள் என்னென்ன என்ற கேள்வி எழுகிறது. மத்திய அரசின் திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றி விட்டால் போதும் என்று நினைக்கிறதா தி.மு.க?
தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களைச் செயல்படுத்த எந்த நிதியும் ஒதுக்கியதாகத் தெரியவில்லை. மாறாக, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பல வீண் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. விளம்பர ஆட்சி நடத்துவதற்காக, பொதுமக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதைத் தவிர, பொதுமக்களுக்குத் தேவையான திட்டங்கள் எதையும் புதிதாக அறிவிக்கவில்லை.
இந்த ஆண்டாவது, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தும் என்று நம்பியிருந்த பொதுமக்களை, தி.மு.க அரசின் பட்ஜெட் நட்டாற்றில் விட்டிருக்கிறது.” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
தமிழக அரசின் பட்ஜெட் குறித்து சட்டசபைக்கு வெளியே போது பேசிய கோவை மேற்கு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தடையின்றி படித்தாரே தவிர, சொல்லிக் கொள்ளும் வகையில் அறிக்கையில் எதுவும் இல்லை” என்று விமர்சனம் செய்தார்.
மேலும், “மத்திய அரசின் ஆவாச யோஜனா திட்டம், தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது, அடையாறு கால்வாயை தூர்வாரும் பணி, கலைஞர் கருணாநிதியின் காலத்தில் இருந்து பேசப்பட்டு வருகிறது. தற்போது வரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும், கோவையில் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் டைடல் பார்க்கை, ஏதோ புதிதாக பேசுவது போல் மாநில அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்த திட்டங்களுக்கு வேறு பெயரை வைக்கும் வகையில் தமிழ்நாடு பட்ஜெட் அமைந்துள்ளது” என்று வானதி சீனிவாசன் விமர்சனம் செய்தார்.
இந்நிலையில், ‘மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசின் பெயர்கள் வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது’ என்ற பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு, தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு, ‘தகவல்களை திரித்து பரப்ப வேண்டாம்’ என்று விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
கைவினைஞர் மேம்பாட்டுத்திட்டமும், விஸ்வகர்மா திட்டமும் வெவ்வேறானவை!
— TN Fact Check (@tn_factcheck) February 20, 2024
தங்களின் மேலான கவனத்திற்கு @VanathiBJP @annamalai_k
Fact checked by FCU | @CMOTamilnadu @TNDIPRNEWS (1/2) pic.twitter.com/OnShewpm08
கைவினைஞர் மேம்பாட்டுத்திட்டமும், விஸ்வகர்மா திட்டமும் வெவ்வேறானவை என்று குறிப்பிட்டு, தங்களின் மேலான கவனத்திற்கு என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இருவரையும் டேக் செய்துள்ளனர்.
கைவினைஞர் மேம்பாட்டுத்திட்டமும், விஸ்வகர்மா திட்டமும் வெவ்வேறானவை
வதந்தி:
“மத்திய அரசின் விஸ்வகர்மா நலத்திட்டத்திற்கு தமிழக கைவினைஞர் மேம்பாட்டுத் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு நிதி விழங்குவது மத்திய அர்சுதான்” என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உண்மை என்ன?
தமிழ்நாடு அரசின் கைவினைஞர் மேம்பாட்டுத் திட்டம்
35 வயதிற்கு மேற்பட்ட கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பயிற்சி கொடுத்து, நவீன தரத்திற்கு உயர்த்துவதே இத்திட்டத்தின் சாரம்சம் ஆகும்.
குடும்பத் தொழிலாக இருக்க வேண்டியதில்லை.
25 சதவீதம் மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டம்
18 வயது நிரம்பியவர்கள் ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய முடியும்.
18 வகைத் தொழில்களை பாரம்பரிய குடும்பத் தொழிலாக செய்பவர்களுக்கு மட்டுமே பயிற்சியும் கடன் உதவியும் வழங்கப்படும்.
தகவல்களைத் திரித்து பரப்ப வேண்டாம் என்று உண்மை சரிபார்ப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.
‘கலைஞர் கனவு இல்லம்’ ஒட்டுமொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது!
— TN Fact Check (@tn_factcheck) February 20, 2024
தங்களின் மேலான கவனத்திற்கு @VanathiBJP @annamalai_k
Fact checked by FCU | @CMOTamilnadu @TNDIPRNEWS
(1/2) pic.twitter.com/e9fcKyPb6p
அதே போல, ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்துக்கு ஒட்டுமொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது! என்று குறிப்பிட்டு, தங்களின் மேலான கவனத்திற்கு என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இருவரையும் டேக் செய்துள்ளனர்.
அதில், ‘கலைஞர் கனவு இல்லம்’ ஒட்டுமொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது!
வதந்தி:
மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறு பெயர் கொடுத்து மாநில அரசு புதிய திடங்களாக அறிமுகம் செய்துள்ளது. வீடற்றோருக்கு வீடு வழங்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை ‘கலைஞர் கனவு இல்லம்’ எனும் திட்டமாக மாற்றியுள்ளது என்று வதந்தி பரப்பப்படுகிறது.
ஆனால், உண்மை என்ன?
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் என்பது ரூ.1.2 லட்சம் வழங்கும் திட்டமாகும். இதில் ரூ. 72,000 ஒன்றிய அரசும், ரூ.48,000 தமிழ்நாடு அரசும் வழங்குகின்றன.
ஒன்றிய அரசு வழங்கும் தொகை போதாது என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு, காண்கிரீட் கூரை அமைப்பதற்காக கூடுதலாக ரூ.1,20,000 வழங்குகிறது. ஆக இத்திட்டத்தில், மொத்தம் ரூ. 2,40,000 பயனாளிக்கு வழங்கப்படுகிறது.
மேற்கண்ட ரூ.2.4 லட்சத்தில் தமிழ்நாடு அரசு 70% தொகையை வழங்குகிறது. ஒன்றிய அரசு 30% மட்டுமே தருகின்றது.
கலைஞர் கனவு இல்லம் திட்டம்
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் முதல் கட்டமாக 1 லட்சம் வீடுகள் தலா ரூ. 3.50 லட்சம் செலவில் இவ்வாண்டில் கட்டப்படும் தமிழ்நாடு அரசே ஒட்டுமொத்த நிதியையும் வழங்கும்.
கிராமப்பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் இதுவாகும். 2030 ஆம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லா தமிழ்நாடு என்ற இலக்குடன் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட இருக்கின்றன.
பயனாளிகளுக்கு வீடு கட்ட நிலம் இல்லாவிடில் நிலத்தையும் அரசே வழங்குகிறது.
‘கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம்’ முற்றிலும் மாநில நிதியால் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது!
— TN Fact Check (@tn_factcheck) February 20, 2024
தங்களின் மேலான கவனத்திற்கு @VanathiBJP
Fact checked by FCU | @CMOTamilnadu @TNDIPRNEWS (1/2) pic.twitter.com/fxdU3DP3LK
‘கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம்’ முற்றிலும் மாநில நிதியால் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது! என்று குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு, தங்களின் மேலான கவனத்திற்கு என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இருவரையும் டேக் செய்துள்ளனர்.
‘கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம்’ முற்றிலும் மாநில நிதியால் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது!
வதந்தி:
மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறொரு பெயர் கொடுத்து மாநில அரசு புதிய திட்டங்களாக அறிமுகம் செய்துள்ளது. Smart Cities திட்டத்தை நகர்ப்புற மேம்பாட்டு திட்டமாக அறிமுகம் செய்தனர்.
உண்மை என்ன?
சீர்மிகு நகரங்கள் Smart Cities
இந்தியாவில் 100 நகரங்களை தேர்வு செய்து தமிழ்நாட்டில் சென்னை உட்பட 11 மாநகராட்சிகளைச் சீர்மிகு நகரங்களாக (Smart City) மாற்றும் திட்டமிது.
2015 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இத்திட்டம் ஒன்றிய அரசும் மற்றும் மாநில அரசும் 50:50 பங்கீட்டின் அடிப்படையில் செயல்படுகிறது.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளிடையே உள்ள வளர்ச்சி இடைவெளியைக் குறைக்க 121 நகராட்சி மற்றும் 528 நகரப் பேரூராட்சிகளிலும் இத்திட்டம் அமலிலுள்ளது.
இந்த திட்டத்திற்கான முழு நிதியும் தமிநாடு அரசே வழங்குகிறது.
ஒன்றிய அரசின் நலத்திட்டத்தை பெயர் மாற்றி மாநில அரசின் திட்டமாக அமலாக்கவில்லை.
ஆகவே தகவல்களைத் திரித்துப் பரப்ப வேண்டாம்.” என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இருவரையும் டேக் செய்து ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.