TN Finance Minister PTR urges banks to ensure Tamil usage: வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேட்டுக்கொண்டார்.
நேற்று (ஜனவரி 24) தலைமைச் செயலகத்தில் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக்களின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர், நிதித்துறை கூடுதல் செயலாளர் என்.முருகானந்தம், ஐஓபியின் தலைமைச் செயல் அதிகாரியும், எஸ்எல்பிசி தமிழ்நாடு தலைவருமான பார்த்த பிரதீம் சென்குப்தா, ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில், மாநில வரவு செலவுத் திட்டத்திற்காக (பட்ஜெட்) வங்கியாளர்களிடமிருந்தும் ஆலோசனைகள் கோரப்பட்டன. அதன்பின், வங்கிகளில் அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
பின்னர் பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஏடிஎம்கள், வங்கிப் படிவங்கள் போன்ற அனைத்து தளங்களிலும் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து வங்கியாளர்களையும் கேட்டுக் கொண்டார். மேலும், முகப்பு மேசைகள் மற்றும் ஹெல்ப்லைன் மேசைகளில் பணியமர்த்தப்பட்டிருக்கும் வங்கி அதிகாரிகள் தமிழ் மொழி அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அடுத்ததாக வங்கிகள் முன்னுரிமைத் துறை கடன் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும், அதைவிட முக்கியமாக ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், தொலைதூரப் பகுதிகளுக்கு, குறிப்பாக பழங்குடியினரின் குடியிருப்புகளுக்கு வங்கிகளின் வசதிகளை வழங்க வங்கிகளை அமைச்சர் வலியுறுத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil