விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமன்ற அரங்கில் மாவட்ட நிர்வாகம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சென்னை ஆகியவை இணைந்து பட்டாசு தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இதில், பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அம்சம்கள்,தொழிற்சாலை சட்டங்கள், வெடிபொருள் சட்டம், படைக்கல சட்டம் மற்றும் பட்டாசு உற்பத்தி பாதுகாப்பில் நிர்வாகத்தின் பங்கு, தொழிலாளர்களின் பங்கு, சட்ட விரோத பட்டாசு தயாரிப்பை தடுக்கும் வழிகள் ஆகியன குறித்து இக்கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் உள்ளதாகவும், தீபாவளி நெருங்கி வரும் வேலையில் தீவிர உற்பத்தி நடைபெறும் போது, அதிக கவனத்தில் உற்பத்தியை கையாள வேண்டும், பயிற்சி முறைகளை அறிந்து வேதிப்பொருள்களின் தன்மையை புரிந்து கொண்டு பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஆனந்த், "மற்ற விபத்து போல் இல்லாமல் பட்டாசு வெடிவிபத்தில், விபத்து தொடர்ந்து நடைபெறமால் இருக்கவும் தடுக்கவும் நேரம் கிடையாது. முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு முறைகளை பின்பற்றுவதே விபத்தை தடுக்கும்.
கடந்த காலத்தில் நடந்த 20 விபத்துகளை பகுப்பாய்வு செய்ததில் 6 விபத்துகள் வேதிப்பொருள் சிதைவின் காரணமாக ஏற்பட்டு இருக்கிறது. மற்ற விபத்துகள் எல்லாம் பெரும்பாலும் மனித தவறுகளால் நடந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. நடப்பாண்டு தமிழகத்தில் நடைபெற்ற 17 விபத்துகளில் 52 பேர் உயிரிழந்தனர். இதில் 12 விபத்துகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று, 42 பேர் உயிழந்துள்ளனர்
இந்த நிகழ்ச்சியின் நிறைவில் பட்டாசு உற்பத்தியில் பாதுகாப்பு குறித்த கையேட்டினை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். இக்கூட்டத்தில் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்கங்களின் பிரதிநிதிகள், தொழிலாளர் நலச்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“