கேலோ இந்தியா: 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.29.5 கோடி மட்டுமே ஒதுக்கீடு! முக்கிய திட்டங்கள் புறக்கணிப்பு!

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.29.5 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. குஜராத்திற்கு ரூ.605 கோடியும் உத்தரபிரதேசத்திற்கு ரூ.509 கோடியும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானாவிற்கு தலா ரூ.180 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.29.5 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. குஜராத்திற்கு ரூ.605 கோடியும் உத்தரபிரதேசத்திற்கு ரூ.509 கோடியும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானாவிற்கு தலா ரூ.180 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Khelo india

கேலோ இந்தியா: 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.29.5 கோடி மட்டுமே ஒதுக்கீடு! முக்கிய திட்டங்கள் புறக்கணிப்பு!

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.29.5 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. குஜராத்திற்கு ரூ.605 கோடியும் உத்தரபிரதேசத்திற்கு ரூ.509 கோடியும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானாவிற்கு தலா ரூ.180 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் கால்பந்து மைதானம் மற்றும் தடங்களுடன் 15 உள்ளரங்க அரங்குகளை கட்டி முடித்துள்ளது. அருணாச்சல பிரதேசம் 18 உள்ளரங்க பல்நோக்கு அரங்குகள் உட்பட 21 திட்டங்களை நிறைவு செய்துள்ளது. குஜராத் ஒரேயொரு மைதானத்திற்காக ரூ.580 கோடியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

குறைந்த நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதன் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் வண்டலூர், தஞ்சாவூர், ஈரோடு மற்றும் சேலத்தில் ஓடுதளங்கள் மற்றும் மேலகோட்டையூரில் உள்ள மாநில விளையாட்டு பல்கலைக் கழகத்தில் ஒரே ஒரு நீச்சல் குளம் மட்டுமே கட்டிமுடிக்க முடிந்தது.

கடந்த ஆண்டு கடலூர், திருவாரூர் மற்றும் தூத்துக்குடியில் பல்நோக்கு விளையாட்டு அரங்குகள் மற்றும் தூத்துக்குடியில் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக 12 புதிய முன்மொழிவுகளை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்தது. மேலும் பல திட்டங்கள் தடகளப் பாதைகள் தொடர்பானவை. இந்த திட்டங்கள் எதுவும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

கேலோ இந்தியாவின் இணையதளத்தின்படி, நிதி ஒதுக்கீடு என்பது திட்டத்தின் சாத்தியக்கூறு மற்றும் நிர்வாக மாவட்டங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது, மாநில ஒதுக்கீட்டை அல்ல எனக் கூறப்படுகிறது. ஆனால் தமிழக அதிகாரிகள், மற்ற மாநிலங்களில் இதுபோன்றே சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு உடனடியாக அதிக எண்ணிக்கையில் ஒப்புதல் அளிக்கப்படுவதாகவும், தங்களுடைய திட்டங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடுகின்றனர்.

"குறைவான பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர்கள் மற்றும் குறைவான விளையாட்டுப் பிரிவுகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேசம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் போன்ற மலைப்பாங்கான மாநிலங்களுக்கு உள்ளரங்க அரங்குகள் அனுமதிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் அதிக மாவட்டங்கள் உள்ளன மற்றும் தேசிய நிகழ்வுகளில் பரந்த அளவில் பங்கேற்கிறது. எங்களுக்கு நிதி மறுப்பதற்கு என்ன நியாயம் இருக்கிறது?" என்று மூத்த விளையாட்டுத் துறை அதிகாரி ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இந்த ஆண்டு நடைபெற்ற 38வது தேசிய விளையாட்டுப்போட்டிகளில், தமிழ்நாடு 27 தங்கம் உட்பட 92 பதக்கங்களுடன் 6வது இடத்தை பிடித்தது. இது 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20% அதிகமாகும். அப்போது மாநிலம் 10-வது இடத்தில் இருந்தது. "நாங்கள் யோகாசனங்களில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது உட்பட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் போட்டியிடுகிறோம். இருப்பினும் எங்கள் உள்கட்டமைப்புத் தேவை புறக்கணிக்கப்படுகிறது" என்று அந்த அதிகாரி கூறினார்.

சர்வதேச உள்ளரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளிக்க உள்ளரங்க மைதானங்கள் முக்கியமானவை என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) சென்னை மாவட்டப் பயிற்சியாளர் வினோத் கூறினார். "நேரு ஸ்டேடியத்தில் இத்தகைய பயிற்சி வசதிகள் உள்ளன. ஆனால் மற்ற மாவட்டங்களில் இல்லை. எங்களுக்கு நிதி கிடைத்தால்தான் மேலும் பல மாவட்டங்களை மேம்படுத்த முடியும்" என்றார் அவர்.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஒதுக்கீடுகளில் பெரும் பாகுபாட்டைக் காட்டுவதாகவும், விளையாட்டில் இளைஞர்களின் ஆர்வத்தைச் சிதைப்பதாகவும் கூறினார். "பல மாநிலங்களை விட தமிழ்நாடு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளது, மேலும் அதற்குரிய பங்கை அதுபெறத் தகுதியானது. இதை நான் நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்" என்றார் அவர்.

2024-ல் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், கேலோ இந்தியா நிதி ஒதுக்கீட்டை "பெரும் அநீதி" என்றும், தங்களுக்கு வாக்களிக்காத மாநிலங்களுக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசு பாகுபாடு காட்டுவதாகவும் X தளத்தில் குறிப்பிட்டு மத்திய அரசை விமர்சித்திருந்தார்.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: