சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட நாட்டியாஞ்சலியின் நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று (பிப். 22) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி பங்கேற்று நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கண்டு களித்தார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, "நாட்டியத்தின் உன்னத மன்னருக்கு ஆண்டுதோரும் அஞ்சலி செலுத்தி வரும் குழுவினருக்கு நன்றி. நடராஜரின் ஆசி பெற்ற இவ்விடத்திற்கு வந்ததால், நான் ஆசி பெற்றதாக கருதுகிறேன். நடராஜர் ஆதி கடவுள் என்பது அனைவரும் அறிந்தது. சனாதன தர்மத்தை பொறுத்தவரை மனித படைப்புகள் பஞ்ச பூதங்களுடன் இணைந்துள்ளது. அதில் நான்கு தமிழகத்தில் உள்ளது.
தமிழ்நாடு ஆன்மீக தலைநகரம். சனாதனத்தின் மையப்புள்ளி தமிழகம் தான். கலாச்சாரம் என்பது வாழும் இடங்களை பொறுத்தது அல்ல. பாரத கலாச்சாரம் என்பது சனாதன தர்ம வேரிலிருந்து வந்தது. அரசியல் காரணங்களுக்காக அதை சொல்ல தயங்குகின்றோம். நமது நடனமும் இசையும் இயற்கையோடு ஆன்மீகத்தோடு ஒன்றியுள்ளது. அதனை தவறவிடக்கூடாது. நமது கலாச்சாரத்தில் நாத்திகர்களும் உள்ளனர். அவர்களை தள்ளி வைக்க முடியாது. அவர்களும் ஒன்றிணைந்தது தான் பாரதம். பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா உள்ளது.
அரசு, மக்களை ஒரு ஆதாரமாகப் பார்க்கிறது. மக்கள் எல்லாவற்றிற்கும் அரசை தேடுகின்றனர். சரி, அரசாங்கம் கொடுக்க வேண்டும், இதைச் செய்ய வேண்டும், ஏழை மக்கள் வாழ வேண்டும் என்று அழைக்கப்படுபடுவர்களால்தான், ஒரு நாடு வளர முடியாது. இன்று நம் இளைஞர்களும், பெண்களும் ராக்கெட்டுகளை ராக்கெட் ஏவி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நம்பமுடியாத விஷயங்களைச் செய்கிறார்கள், நாம் இன்று உலகின், தலைமை பண்பில் இருகிறோம். உலக அளவில் பெருந்தொற்றை கடந்தோம். இந்த பாதிப்பில் இருந்து எப்படி தப்பிப்பது என்ற கவலையில் உலகமே ஆழ்ந்த நிலையில் நாம் 150 நாடுகளுக்கு, தடுப்பூசிகளை விநியோகித்தோம். இதற்கு காரணமான சாதனை விஞ்ஞானிகளுக்கு நன்றி. உலகமே ஒரு குடும்பம் என நாம் நம்புகிறோம். இந்தியாவின் எழுச்சியை உலகம் பார்க்கிறது. பெரிய நாடுகள் சட்டத்தையும், மனிதநேயத்தை மதிக்காமல் விட்டுவிட்டது. ஆனால் இந்தியா இவை தங்களின் குறிக்கோளாக வைத்துள்ளது.
இதைதான் உலக நாடுகளும் நம்பிக்கையுடன் இந்தியாவிடம் எதிர்பார்க்கிறது. குறிப்பாக உலகளாவிய காலநிலை நெருக்கடியை நாம்தான் தீர்க்க முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலக அளவில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது, நம் நாட்டை ஒரு குடும்பமாக பார்க்கிறோம். குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்தால் அனைவருக்கும்தான் பாதிப்பு. ஆகவே எந்த பிரச்சனையும் உடனடியாக தீர்க்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது. போரை இந்தியா விரும்புவதில்லை. இவை அனைத்தையும் நம் பிரதமர் தான் செய்து கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். இது இந்தியாவிற்கான நேரம். நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரம் மட்டுமல்ல, அறிவியல், தொழில்நுட்பம் என்ற அடிப்டையில்தான் உள்ளது.
ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளை கற்க வேண்டும். ஆனால் தாய்மொழியை விட வேறு எதுவுமில்லை. நமது அறிவியல் அடையாளர் என்பது நமது டி.என்.ஏ-வில் உள்ளது, நம் பாரம்பரியத்தைப் பற்றி, நாம் பெருமைப்பட வேண்டும், ஆன்மீகத்தில் வேரூன்றிய நமது கலாச்சாரம் குறித்து பெருமிதம் கொள்வோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். ஆன்மீக பக்தி, ஒற்றுமை உணர்வில் இங்கு இது நிகழ்த்தப்படுகிறது. அதுமட்டுமல்ல அது ஒரு கலாச்சார விழாவாக தொடர்கிறது" என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்து நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடனம் ஆடினர். ஆளுநர் வருகையையொட்டி சிதம்பரத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிர்வாகிகள் டாக்டர் முத்துக்குமரன், வழக்கறிஞர் சம்மந்தம், டாக்டர் கணபதி, டாக்டர் அருள்மொழிசெல்வம் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.