வாரிசு, துணிவு திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும், விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் நேற்று (ஜனவரி 11) திரையரங்குகளில் வெளியானது.
கிட்டதிட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்-விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியானது. இருவரும் தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரம் என்பதால் அவர்களின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். துணிவு படத்தை எச். வினோத் இயக்கினார். வாரிசு படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கினார். இரண்டு படங்களிலும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். துணிவு படத்தில் சமுத்திர கனி, மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வாரிசு படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் துணிவு படத்தின் சிறப்பு காட்சி நேற்று அதிகாலை 1 மணிக்கு வெளியிடப்பட்டது. வாரிசு படத்தின் சிறப்பு காட்சி அதிகாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது. படம் வெளியாகும் முன் ரசிகர்கள் தியேட்டர் முன் குவிந்து பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். இரண்டு படங்களும் கலவையான வரவேற்பு பெற்றுள்ளது. துணிவு ஆக்ஷன் படமாகவும், வாரிசு குடும்ப படமாகவும் உள்ளது என ரசிகர்கள், விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மட்டும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும், பொங்கல் பண்டிகை நாட்களில் திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை, ரத்து என அரசு அறிவித்திருந்தது. தொடர்ந்து, திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது அரசு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12, 13, 18 தேதிகளில் வாரிசு, துணிவு திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/