Tn Government Announced For Govt Employees : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவரமாக களமிறங்கியுள்ளன. இதில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், திமுக தலைவர் ஸ்டாலினும், தற்போது நடைபெறும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதில் பல்வேறு கிராமங்களில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்து வரும் ஸ்டாலின், தான் ஆட்சிக்கு வந்தால் தனி கமிட்டி அமைத்து 100 நாட்களில் மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கும் முதல்வர் பழனிச்சாமி வெற்றிநடைபோடும் தமிழகம் என்ற பெயரில் வீடியோ விளம்பரங்களை ஊடகங்களில் ஒளிபரப்பி வருகிறார்.
மேலும் அரசு ஊழயர்களை கவரும் வகையில் பல திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் செய்த அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்ட்ட வழக்குகள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் கூறுகையில், ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற உயரிய கருத்தை மனதில் வைத்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு, வழக்குகள் அனைத்தையும், அரசு கைவிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், அவர்களை மேலும் மகிழ்ச்சியாக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் இன்று மற்றொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணத்தை மேலும் அதிகரிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அரசு ஊழியர்கள் வீடு கட்டுபவதற்கு வழக்கப்பட்ட முன்பணம் 25 லட்சத்தில் இருந்து 40 வட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.