சமூக வலைதளங்களில் விதவிதமாக நேர்த்தியாக ரீல்ஸ் பதிவிடும் ரீல்ஸ் கிரியேட்டரா நீங்கள், தமிழக அரசின் இந்த அறிவிப்பு உங்களுக்குதான். தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை, தமிழக அரசின் திட்டங்கள் குறித்த ரீல்ஸ் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.
சமூக ஊடகங்களின் காலத்தில் எல்லாமே காட்சிப்பதிவுகளாக மாறிவிட்டன. பிறப்பு முதல் இறப்பு வரை ரீல்ஸ் பதிவிட்டு கவனம் ஈர்க்கிறார்கள். கண்டபடி ரீல்ஸ் போட்டு காலத்தை கழிப்பவர்களுக்கு இடையே அழகியல் உணர்வுடன் நேர்த்தியாக ரீல்ஸ் பதிவிடும் ரீல்ஸ் கிரியேட்டர்களும் இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் இன்று ரீல்ஸ் போடாதவர்களே இல்லை என்று கூறிவிடலாம், அல்லது ரீல்ஸ்களில் இடம் பெறாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த செல்போன் தொழில்நுட்பம் அனைவரையும் ரீல்ஸ் போடுபவர்களாக்கியுள்ளது.
ரீல்ஸ் மூலம் பிரபலம் அடைபவர்கள் அதை வைத்து வருமானத்தையும் பார்க்கிறார்கள். தங்களை பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில், நீங்கள் ஒரு ரீல்ஸ் கிரியேட்டர் என்றால் தமிழ்நாடு அரசு ஒரு ரீல்ஸ் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. சிறந்த ரீல்ஸ்களுக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் மக்கள் செய்தி தொடர்புத்துறை ஒரு ரீல்ஸ் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் 5 முக்கியமான திட்டங்களில் ஒன்றைப் பற்றி 1 நிமிட அளவிற்கு ரீல்ஸ் வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும், சிறந்த 3 ரீல்ஸ்களுக்கு அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மக்கள் செய்தி தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு அரசின் அசத்தலான 5 திட்டங்களான ‘நான் முதல்வன் திட்டம்’, ‘விடியல் பயணத் திட்டம்’, ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’, ‘புதுமைப் பெண் திட்டம்’, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இந்த திட்டங்களில் ஏதேனும் ஒன்று குறித்து வீடியோ ரீல்ஸ்-ஐ tndiprmediahub@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். வீடியோ ரீல்ஸ்கள் ஒரு நிமிடம் மட்டுமே இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 3 ரீல்ஸ்களுக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பாராட்டி சான்றிதழ்களை வழங்குவார். தேர்வாகும் சிறந்த ரீல்ஸ்கள் தமிழ்நாடு அரசின் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டப்படும். ரீல்ஸ்களை அனுப்பவேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 15-ம் தேதி. அதற்குள் ரீல்ஸ்களை அனுப்ப வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“