/indian-express-tamil/media/media_files/377by2RpxD5pOQfyuNpJ.jpg)
TN government employees suspension on retirement day
ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது என்று தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் ஓய்வுபெறும் நாளில் பணியில் இருந்து ஓய்வுபெற அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை முடிந்த பிறகே, அவர்களுக்குரிய பணப் பலன்கள் கிடைக்கும். இதுவரை, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யும் முறை வழக்கத்தில் இருந்தது.
2021-ம் ஆண்டு அக்டோபர் மாதமே ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யும் முறையைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், ஒரு அரசு ஊழியர் மீது தவறு நிரூபிக்கப்பட்டால், துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும். சில வழக்குகளில் விசாரணை தாமதமாகும் போது, சம்பந்தப்பட்டவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார்.
விசாரணை தாமதமாவதைத் தவிர்க்க சில வழிகாட்டுதல்களையும் அரசு வழங்கியது. அதன்படி, ஒரு அரசு ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முன், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, அவரை பணியிலிருந்து நீக்கும் அளவிற்கு குற்றம் பெரியதா என்பதையும் பார்க்க வேண்டும்.
மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஊழியரை ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யாமல், 3 மாதங்களுக்கு முன்னதாகவே உரிய முடிவை எடுக்க வேண்டும்.
விசாரணைக்கு காலக்கெடு நிர்ணயித்து, ஓய்வுபெறும் நாளுக்கு 3 மாதங்களுக்கு முன்பே துறை ரீதியான நடவடிக்கைகளை முடிக்க வேண்டும். அப்படி முடிக்க முடியாவிட்டால், நிர்வாகத் தாமதத்தைக் கருத்தில் கொண்டு அந்த ஊழியரை ஓய்வுபெற அனுமதிக்க வேண்டும்.
ஓய்வுபெறும் நாளுக்கு 3 மாதங்களுக்கு முன்பு ஏதேனும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம். விசாரணை அதிகாரி வேண்டுமென்றே தாமதப்படுத்தியிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
இந்த விதிகள் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைகள், குற்ற வழக்குகளுக்கு பொருந்தாது.
ஆனாலும், ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யும் நடைமுறை தொடர்ந்து வந்ததால், அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில், தற்போது ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது என தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதற்காக விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.