/indian-express-tamil/media/media_files/2025/03/13/jNaQl3bVXgWEk105fQ6U.jpg)
தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை, தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் எடுப்பதில் தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு தாமதம் செய்வதாக குற்றம் சாட்டினார். தம்பிதுரை எழுப்பிய இந்த புகாருக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை நில எடுப்பு செய்வதில் மாநில அரசு காலதாமதம் செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை அவர்கள் தெரிவித்துள்ளதாக சில நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது தொடர்பாக கீழ்கண்ட விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2021-மே மாதம் முதல் தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த ரயில்வே திட்டங்களுக்கான நில எடுப்பு பணிகளின் மீது தனிக்கவனம் செலுத்தி விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரயில்வே திட்டங்களுக்காக மாநிலம் முழுவதும் கையகப்படுத்தப்படும் நிலங்களின் விவரங்கள்.
தமிழ்நாட்டில் மத்திய அரசின் ரயில்வே திட்டங்களுக்கு மொத்தமாக 2197.02 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய ஏற்கனவே தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முக்கியமான 17 ரயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு செய்யப்பட வேண்டிய 1253.11 ஹெக் நிலங்களில், 1144.84 ஹெக்டேர் நிலங்களுக்கான நில எடுப்புப் பணிகள் முடிவுற்று (அதாவது 91% சதவீதம்) நிலம் ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் குறிப்பாக முக்கியத் திட்டங்களான திண்டிவனம்-நகரி அகல ரெயில்பாதை (100%), மதுரை - தூத்துக்குடி அகல ரயில்பாதை (100%), மணியாச்சி-நாகர்கோவில் அகல ரயில்பாதை (97%), கன்னியாகுமரி - நாகர்கோவில் அகல ரயில் பாதை இரட்டிப்பாக்குதல் (100%), தூத்துக்குடி - மதுரை (அருப்புக்கோட்டை வழி) புதிய அகல ரயில் பாதை கட்டம் 1 (100%), சின்னசேலம் - கள்ளக்குறிச்சி புதிய அகல ரயில்பாதை (98%), கொருக்குப்பேட்டை - எண்ணூர் நான்காவது வழித்தடம் (100%) மயிலாடுதுறை - திருவாரூர் அகல ரயில்பாதை (100%), பட்டுக்கோட்டை நான்குமுனை சந்திப்பு (100%), புதிய அகல ரயில் பாதை (சேலம் கரூர் வழித்தடம் உருவாக்குதல்) (100%). மன்னார்குடி - நீடாமங்கலம் அகல ரயில்பாதை (100%), சென்னை கடற்கரை - கொருக்குப்பேட்டை மூன்றாவது நான்காவது வழித்தடம் (100%), மற்றும் விழுப்புரம் - திண்டுக்கல் அகல ரயில்பாதை (100%) ஆகிய திட்டங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ளவாறு 97% முதல் 100% வரை நில எடுப்புப் பணிகள் முடிக்கப்பட்டு மத்திய ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. எஞ்சிய நில எடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரயில்வே துறையால் எடுக்கவேண்டிய நடவடிக்கையால் நிலுவையிலுள்ள இடங்கள்
திருவண்ணாமலை - திண்டிவனம் புதிய அகல ரயில்பாதை திட்டத்திற்கு 229.23 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய 2011-ம் ஆண்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டும் ரயில்வே துறையினரால் நில எடுப்பிற்கு நிதி ஒதுக்கப்படாததால் நில எடுப்புப் பணிகள் அனைத்தும் முற்றிலும் முடங்கி உள்ளன.
அத்திப்பட்டு புத்தூர் இடையிலான ரயில்வே தடத்திற்கு இதுவரை ரயில்வே துறையினரால் நிலத் திட்ட அட்டவணை (LP.S) சமர்ப்பிக்கப்படவில்லை மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.” என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.