/indian-express-tamil/media/media_files/2025/08/15/tn-govt-whatsapp-2025-08-15-10-16-39.jpg)
Tamil Nadu Government e-governance
இனிமேல் அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய அவசியமில்லை. கையில் இருக்கும் வாட்ஸ்அப் போதும்! தமிழ்நாடு அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து, வாட்ஸ்அப் மூலம் 50க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை வழங்க ஒரு புரட்சிகரமான திட்டத்தை தொடங்கியுள்ளது. ரேஷன் கார்டு சம்பந்தமான வேலைகள், பிறப்புச் சான்றிதழ் பெறுவது, வரி செலுத்துவது, ஏன் அரசு பஸ் டிக்கெட் புக் செய்வது கூட இனி வாட்ஸ்அப்பிலேயே முடித்துவிடலாம்.
இந்த புதிய முயற்சி, மக்களுக்கு அரசு சேவைகளை மிக எளிமையாகவும், விரைவாகவும் கிடைக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இயங்கும் ஒரு அதிநவீன (ஏஐ) சாட்பாட் உருவாக்கப்பட்டுள்ளது.
எப்படி இயங்குகிறது இந்த சாட்பாட்?
இந்த சாட்பாட், உங்கள் கோரிக்கைகளைப் புரிந்துகொண்டு, உங்களுக்குத் தேவையான சேவைக்கு வழிகாட்டும்.
விண்ணப்ப படிவங்களை நிரப்புவது, தேவையான ஆவணங்களை அப்லோட் செய்வது, கட்டணம் செலுத்துவது என எல்லாவற்றையும் வாட்ஸ்அப்பிலேயே செய்துவிடலாம்.
வாட்ஸ்அப்பின் சொந்த கட்டண வசதி அல்லது பிற டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்தி பணத்தைச் செலுத்தலாம்.
நீங்கள் விண்ணப்பித்த சான்றிதழ்களை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த சாட்பாட், அடுத்த மூன்று மாதங்களில் செயல்படத் தொடங்கும் என்று தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமை தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக 50 சேவைகள் தொடங்கப்பட்டு, படிப்படியாக மேலும் பல சேவைகள் சேர்க்கப்படும். இறுதியாக, மின்சேவை மையங்களில் கிடைக்கும் 34,843 சேவைகளையும் வாட்ஸ்அப் வழியாகக் கொண்டுவருவதே இத்திட்டத்தின் பெரிய இலக்கு.
என்னென்ன சேவைகள் கிடைக்கும்?
ரேஷன் கார்டு: புதிதாக விண்ணப்பிப்பது, முகவரி மாற்றுவது, குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது அல்லது நீக்குவது.
சான்றிதழ்கள்: பிறப்பு, வருமானம், முதல் பட்டதாரி, இருப்பிடச் சான்றிதழ்கள்.
கட்டணங்கள்: நீர் வரி, சொத்து வரி, மின் கட்டணம் செலுத்துதல்.
பயணம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகு இல்லங்களை முன்பதிவு செய்தல்.
பிற சேவைகள்: உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிந்துகொள்ளுதல்.
இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘மெட்டா’ நிறுவனத்தின் இந்திய வர்த்தக மெசஜ் பிரிவு இயக்குனர் ரவி கார்க் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு சேவைகளைப் பெற இனி நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை; இனி உங்கள் ஸ்மார்ட்போனிலேயே எல்லாம் சாத்தியம்! இந்த புதிய முயற்சி தமிழ்நாட்டில் டிஜிட்டல் மாற்றத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.