வேங்கை வயல் கிராமத்தில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை, முத்துகாடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தில் வேங்கை வயல் பகுதியில், பட்டியலின சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு இவர்களுக்கென்று தனியாக தண்ணீர் தொட்டி இருக்கிறது. இதில் கடந்த சில வாரங்களுக்கு முன், சில சமூக விரோதிகள், தண்ணீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்துள்ளனர். இந்த தண்ணீரை குடித்த அப்பகுதி மக்களுக்கு உடல் உபாதகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்ற சாதியக் கொடுமை நடைபெற்று வருவதாகவும், அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் மக்கள் குடி தண்ணீர் எடுக்கும் தண்ணீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்களை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வேங்கை வயல் தண்ணீர் தொட்டியை இடிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்களுடன் பல தரப்பினரும் இணைந்து தண்ணீர் தொட்டியை இடிக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தற்போது வேங்கை வயல் கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜியசபா உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தண்ணீர் தொட்டியை இடிப்பதற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், புதிய தண்ணீர் தொட்டி அமைக்க தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ 9 லட்சம் நிதி ஒதுக்கியுள்தாகவும், அதற்கு நிர்வாக அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும், தற்போது உள்ள நீர் தேக்க தொட்டி இடிக்கும் பணியும் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“