பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மழை வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், மழையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக அமைச்சர்கள் கூறியுள்ளனர். களநிலைமை என்ன? என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல் அமைச்சர்கள் உளறுவது கண்டிக்கத்தக்கது.
தலைநகர் தில்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் சென்ற வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு,‘‘தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை. வழக்கம்போல இயல்பு வாழ்க்கை நடைபெற்று வருகிறது’’ என்று கூறியுள்ளார். அதேபோல், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஜெயக்குமார், நாகை மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர். அமைச்சர்களின் அதிபுத்திசாலித்தனமான கருத்துக்களைக் கேட்கும் போது வெறுப்பும், வேதனையும் தான் மிஞ்சுகின்றன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மழையால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையிலும் அதையொட்டிய மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் தொடர் மழையாலும், ஏரிகளின் கரைகள் உடைந்ததாலும் பல ஊர்களில் வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ளம் வடிவதற்குரிய வாய்ப்புகள் தென்படாததால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். மின்சார வாரியத்தின் அலட்சியம் காரணமாக மின்சாரம் தாக்கி சென்னையில் 2 சிறுமிகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த 7 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 20 பேர் கடந்த சில நாட்களில் மழை காரணமாக உயிரிழந்துள்ளனர்.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஒரு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பருவ நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. வழக்கமாக நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கினாலும் ஓரிரு நாட்களில் வடிந்து விட்டால் பயிர்கள் எந்த பாதிப்பும் இன்றி தப்பிவிடும். ஆனால், 5 நாட்களாக வயல்களில் வெள்ளம் வடியாததால் பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ளன. மழையால் சாலைகள், கால்வாய்கள் போன்றவையும் சேதமடைந்துள்ளன.
இத்தகைய சூழலில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்வதும், அதன்பின்னர் வெள்ள சேதத்தை மதிப்பிட்டு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கான நிதியை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறுவதும் தான் தமிழக அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும். இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி சில தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை சென்னை வரும் நிலையில், அவரிடம் நிவாரண நிதிக்கான முதல்கட்ட கோரிக்கை மனுவை தமிழக அரசு அளிக்க வேண்டும். ஆனால், இதுவரை அத்தகைய கோரிக்கை மனுவை தமிழக அரசு தயாரித்ததாகவோ, மழை & வெள்ள சேதங்கள் குறித்து மதிப்பிடப்பட்டதாகவோ தெரியவில்லை.
மாறாக, மழை&வெள்ளத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக அமைச்சர்கள், அதுவும் வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவும், காவிரி பாசன மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் கூறியிருப்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, மழை&வெள்ள நிவாரணப் பணிகளின் போது அமைச்சர்கள் கூறும் பொறுப்பற்ற வார்த்தைகள் மக்களை ஆறுதல் படுத்துவதற்கு மாறாக அவர்களை கோபப்படுத்துகின்றன. அமைச்சர்களுக்கு எதிராக பல இடங்களில் பொதுமக்கள் நடத்திய முற்றுகைப் போராட்டங்களுக்கு அவர்களின் பொறுப்பற்ற செயலும், பேச்சும் தான் காரணமாகும்.
தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் 11 போக சாகுபடி நடந்திருக்க வேண்டும். ஆனால், 6 போக குறுவை சாகுபடி வறட்சியாலும், இரு போக சம்பா சாகுபடி வறட்சி மற்றும் வெள்ளத்தாகும் சேதம் அடைந்தன. நடப்பு சம்பா பருவ சாகுபடியாவது வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று விவசாயிகள் வேண்டிக்கொண்டிருந்த நிலையில் அதற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடை பெற்றுத் தர வேண்டிய அமைச்சர்களே அதற்கு எதிராக செயல்படுவது பெருங்குற்றமாகும்.
மழை, வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் அரசின் செயல்பாடுகள் வருத்தமளிக்கும் நிலையில், காவல்துறை அதிகாரிகள் மிகச்சிறப்பான முறையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அதைக் கெடுக்கும் வகையில் தான் அமைச்சர்களின் செயல்பாடுகள் உள்ளன. மழை நிவாரணப் பணிகளை அமைச்சர்கள் பார்வையிடுவதால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை; மாறாக அவர்களின் செயல்பாடுகளால் பாதிப்புகள் தான் ஏற்படுகின்றன. எனவே, மழை பாதிப்புகள் குறித்து பேச அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டு போடுவதுடன், அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கி, அவர்களை முழுவீச்சில் மழை - வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு ஈடுபடுத்த வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.