எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்ட தீர்ப்பின் மீது தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல்: முதல்வர் உத்தரவு

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட தீர்ப்பின் மீது உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவு நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட நடைமுறைகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் 20ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்வதற்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.

இதுபோன்ற வழக்குகளில் அரசு ஊழியர்களைக் கைது செய்வதற்கு முன்னர், துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்துக்குக் குறைவு இல்லாத அதிகாரி கண்டிப்பாக முதல் கட்ட விசாரணை நடத்த வேண்டும்; மேலும் உரிய உயர் அதிகாரியின் ஒப்புதலை முன்கூட்டியே பெற்றுத்தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இந்தச் சட்டப்படியான வழக்கில் ஒருவர் மீதான குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் இல்லை என்றாலோ அல்லது நீதிமன்றத்தின் பரிசீலனையில் புகாரில் தவறான நோக்கம் இருக்கிறது என்று அறிந்தாலோ, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு முன்ஜாமீன் வழங்கத் தடை இல்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அப்பாவி மக்களைப் பாதுகாக்கத்தான் இந்த உத்தரவுகள் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்தத் தீர்ப்பினால் நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்பட்டது. மேலும் வட இந்தியாவில் வன்முறையும் வெடித்தது. இந்த வன்முறையில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் ஒரு முயற்சி இது என்ற குற்றச்சாட்டை அரசியல் கட்சிகளும், தலித் அமைப்புகளும் முன்வைத்தன.

இந்நிலையில் இச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்துப் பரிசீலிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், கே.பி.அன்பழகன், வி.எம்.ராஜலட்சுமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் ஜெனரல் விஜய் நாராயண், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், போலீஸ் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் கூடுதல் டி.ஜி.பி., கே.சி.மகாலி உட்பட அரசு உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எஸ்.சி/எஸ்.டி மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தின் முடிவில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் பேரில் தமிழக அரசின் சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவரின் நலனைக் கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து தமிழ்நாட்டின் சார்பாக மறுஆய்வு மனு தாக்கல் செய்யத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close