டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தற்போது, அணையின் முழுக் கொள்ளளவு ஆன 120 அடியில், 100 அடி நீர் இருப்பதாலும், கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் டெல்டா பகுதிகளில் விவசாயப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளவும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
முன்னதாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பதால், குறுவை பாசனத்திற்காக ஜூன் 12-இல் அணையைத் திறக்கும் அறிவிப்பினை
தமிழக முதல்வர் விரைவாக வெளியிட வேண்டும்” என்று அறிக்கை விடுத்தார். ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,” 90 அடி நீர் இருப்பு இருந்தாலே, ஜூன் மாதத்தில் அணை திறக்கப்படும். ஆனால், கையில் இரு இருப்பு அதிகமாக இருக்கையில் ஏன் தமிழக அரசு இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக- குறிப்பாக, 2016- இல் 20.9.2016; 2017 இல் – 2.10.2017, 2018 இல் – 19.7.2018, 2019இல் – 13.8.2019 என மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டது” என தெரிவித்தார்.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை போன்ற காரணங்களால், கடந்த ஆண்டு ஆகஸ்ட மாதம் 13ம் தேதி முதல் இன்று வரை (276) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது. இதனால், ஜூன் 12க்கு முன்பே, குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று விவசாயிகள் மத்தியில் கருத்து நிலவி வந்தது.
இந்நிலையில், இன்று சென்னையில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதில், ஜூன்-12 முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil