கர்நாடகா மாநிலத்திற்கு வறட்சி நிவாரணம் வழங்குவதில் தாமதம் குறித்து மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சில நாட்களுக்குப் பிறகு, 2023 டிசம்பரில் புயல் மற்றும் தென் தமிழகத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களுக்கு, மத்திய நிதியை ஒதுக்க மறுக்கும் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தை அணுகும், என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக, திங்கள் கிழமை ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், ‘மாநில அரசு நிவாரணமாக 37,000 கோடி கோரியது, இன்னும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் மத்திய அரசு நிதி வழங்க மறுக்கிறது. மாநில அரசு வழங்கிய இழப்பீட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘பிச்சை’ என்கிறார். எனவே நமக்கு உரித்தான நிவாரண நிதிக்காக நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்பதை இங்கு அறிவிக்கிறேன். நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று அமைச்சராக இருந்த பொன்முடியை மீண்டும் பதவியில் அமர்த்துவது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகி வெற்றி பெற்றுள்ளோம்.
அரசு செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவும் மக்கள் செலுத்தும் வரிப்பணம், அவர்கள் இக்கட்டான நிலையில் இருக்கும்போது அரசு அவர்களுக்கு உதவ வேண்டும். அரசிடம் கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது, இந்த உரிமையை கிண்டல் செய்ததில் இருந்து பா.ஜ.க.வின் வீழ்ச்சி தொடங்கியது.
ஒரு அமைச்சர் தமிழ் மக்களை பிச்சைக்காரர்கள் என்றும், மற்றொரு மத்திய அமைச்சர் தமிழர்களை பயங்கரவாதிகள் என்றும் கூறுகிறார்.
நிர்மலா சீதாராமன் மக்களை ஒருமுறை சந்தித்து தனது கருத்துக்கு அவர்களின் பதிலைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படியானால் தான், இனி பிச்சை என்ற வார்த்தையை அவர் பயன்படுத்த மாட்டார், என்றார் ஸ்டாலின் .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“