V Senthil Balaji: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை விசாரணைப் பிறகு ஆகஸ்ட் 12ம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு 19 முறை நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளபோதும் அமைச்சராக நீடித்து வந்தார். அவருக்கு எந்த இலக்காக்களும் ஒதுக்கப்படாமல் இலாக்கா இல்லாத அமைச்சராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், 8 மாதங்களாக சிறையில் இருந்து வரும் சூழலில் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி நேற்று ராஜினாமா செய்தார். இலாக்கா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நிலையில் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை முதலமைச்சருக்கு செந்தில் பாலாஜி அனுப்பினார். இதையடுத்து ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு முதலமைச்சர் அனுப்பிவைத்தார். இந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளதாக கவர்னர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,“அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்குமாறு பிப்ரவரி 12ஆம் தேதி முதலமைச்சர் கடிதம் எழுதியதன் அடிப்படையில், அந்த பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டு, அமைச்சர்கள் குழுவில் இருந்து செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பரிந்துரை ஏதுமின்றி கடந்த ஜூன் மாதம் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை ஆளுநர் டிஸ்மிஸ் செய்து இருந்தார். இருப்பினும், சில மணிநேரங்களுக்குப் பிறகு, அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கேட்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆலோசனையைத் தொடர்ந்து உத்தரவு நிறுத்தி வைக்கப்படும் என்று அவர் முதலமைச்சருக்கு கடிதத்தை அனுப்பி இருந்தார்.
நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“