Advertisment

துணைவேந்தர்கள் நியமனம்: ஆளுநர் தன்னிச்சையாக தேடுதல் குழு அமைக்க கல்வியாளர்கள் எதிர்ப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தன்னிச்சையாக யு.ஜி.சி பிரதிநிதிகளைச் சேர்த்து மூன்று பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் தேடுதல் குழுவை அமைத்ததையடுத்து கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
RN Ravi (7)

துணைவேந்தர்கள் நியமனம்: ஆளுநர் தன்னிச்சையாக தேடுதல் குழு அமைக்க கல்வியாளர்கள் எதிர்ப்பு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தன்னிச்சையாக யு.ஜி.சி பிரதிநிதிகளைச் சேர்த்து மூன்று பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் தேடுதல் குழுவை அமைத்ததையடுத்து கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisment

சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர்களை தேர்வு செய்ய தன்னிச்சையாக தேடுதல் குழு அமைத்த ஆளுநர் ஆர்.என். ரவி, அதில் முதல்முறையாக யு.ஜி.சி பிரதிநிதியை சேர்த்து செப்டம்பர் 6-ம் தேதி உத்தரவிட்டார்.


தமிழ்நாட்டில் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர். 3 பேர் கொண்ட தேடுதல் குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான 3 பேரின் பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம்.

ஆனால், துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி) பிரதிநிதி ஒருவரை சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் நிபந்தனை விதித்துள்ளதாக அண்மையில் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இதனால், ஆளுநர் விதித்த நிபந்தனை தொடர்பாக, தமிழக உயர் கல்வித் துறை சார்பில் விளக்கக் கடிதம் அனுப்பியது. அதில், “துணைவேந்தர் நியமனத்தில், யு.ஜி.சி-யின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம். தேடுதல் குழுவில் யு.ஜி.சி-யின் பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த சூழ்நிலையில்தான், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர்களை தேர்வு செய்ய தன்னிச்சையாக தேடுதல் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதில், முதல்முறையாக யு.ஜி.சி பிரதிநிதியை சேர்த்து உத்தரவிட்டிருப்பதற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

யு.ஜி.சி பிரதிநிதிகளை துணை வேந்தர்கள் தேடல் குழுக்களில் சேர்ப்பதை எதிர்க்கும் வகையில், ஆளுநரால் புதிதாக அமைக்கப்பட்ட 3 துணை வேந்தர்கள் தேடுதல்  குழுக்களை தமிழக அரசு அறிவிக்காததால் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி, இந்த முடிவு நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாகவும், ஆனால் வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு சொந்தமாக தேடுதல் குழுக்களை அமைக்க சிறப்பு அதிகாரமோ விதிகளோ இல்லை என்றும் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “துணை வேந்தர் தேடுதல் குழுக்களில் யு.ஜி.சி பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்ற ஆளுநரின் எண்ணம் நல்லது, வரவேற்கத்தக்கது, ஆனால், அதை ஆளுநர் மாளிகையால தன்னிச்சையாக செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட விதிகள், வழிகாட்டுதல்களின்படி தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும், அரசிதழில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட வேண்டும்.” என்று  கூறினார்.

“பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் துணை வேந்தர் தேடுதல் குழுக்களின் அறிவிப்பில் பின்பற்றப்பட்ட மரபுகளை ஆளுநர் மாளிகை மதிக்க வேண்டும். ஆளுநர் வேந்தராக தன்னிச்சையாக தேடுதல் குழுக்களை அமைத்து அவற்றை பத்திரிகைகளுக்கு அறிவிக்க எந்த சிறப்பு அதிகாரமும் விதிகளும் இல்லை. மாநில அரசு உத்தரவு பிறப்பித்த பிறகே துணைவேந்த தேடுதல் குழு செயல்படும்” என்று பாலகுருசாமி கூறினார்.

யு.ஜி.சி-யின் பிரதிநிதியை தேடுதல் குழுவில் சேர்க்க அனைத்து பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று பாலகுருசாமி கூறிதுள்ளார். “ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள மாநிலத்தில் உயர்கல்வியின் தரம், அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான இந்த மோதல் நிலை துணைவேந்தர் நியமனத்தை மேலும் தாமதப்படுத்தும், பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டை மோசமாக பாதிக்கும்.” என்று பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி. தியாகராஜன்,  “பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் ஆளுநர், துணை வேந்தர் தேடுதல் குழுக்களை அமைக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்” என்று கூறினார்.

அதே நேரத்தில், மாநில அரசால் அரசாணை மூலம் அறிவிக்கப்படாத வரை இந்த துணை வேந்தர் தேடுதல் குழுக்கள் செயல்படாது என்று எஸ்.பி. தியாகராஜன் கூறினார். மேலும்,  “துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான ஒட்டுமொத்த நடவடிக்கைகளிலும் இது முட்டுக்கட்டையாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

இதனிடையே, கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை கவுன்சில் (ஜே.ஏ.சி), தமிழ்நாடு ஆளுநரிடம், யு.ஜி.சி பிரதிநிதியைச் சேர்த்து துணை  வேந்தர் தேடுதல் குழுக்களை அமைத்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் சங்கம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இருந்து ஓய்வு பெற்ற சுமார் 4,000 கல்லூரி ஆசிரியர்களை உள்ளடக்கிய அமைப்பும் இந்த பிரச்சினை குறித்து கவலை தெரிவித்துள்ளது. யு.ஜி.சி-யின் 2018-ம் ஆண்டு வழிகாட்டுதல்களை மாநிலம் இன்னும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், யு.ஜி.சி தலைவரின் நியமனத்தை தேடுதல் குழுவில் சேர்ப்பது மாநிலத்தின் அதிகாரங்கள்/சுயாட்சியை மீறுகிறது, உயர்கல்வி பேரத்தில் பலியாகிறது என்று தெரிவித்துள்ளது.

உயர்கல்வியில் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக, ஆளுநர் தன்னிச்சையாக மூன்று துணை வேந்தர்கள் தேடுதல் குழுக்கள் அமைத்த, பத்திரிகை அறிவிப்புகளை திரும்பப் பெறுவதன் மூலமும், துணை வேந்தர்களை நியமிக்கும் நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலமும் மோதலை தவிர்க்குமாறு ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்ய, 3 பேர் கொண்ட துணை வேந்தர் தேடுதல் குழு அமைக்கப்படுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வந்த நிலையில், முதல் முறையாக ஆளுநர் ஆர்.என். ரவி யு.ஜி.சி பிரதிநிதியை சேர்த்து 4 பேர் கொண்ட தேர்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment