கடலூரில் திமுக, விசிக உள்ளிட்ட கட்சியினரின் எதிர்ப்பினை மீறி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஏற்கனவே ஆய்வு செய்திருந்தார். இது ஆளுநர் தன் வரம்பை மீறி செயல்படுவதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியிருந்தனர். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களை சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடலூரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, ஆளுநர் தன் வரம்பை மீறி செயல்படுவதாக கூறி, திமுக, விசிக கட்சியினர் கருப்பு கொடியுடன் பேரணி சென்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், ஆளுநர் முதலில் கடலூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்வதாக இருந்தது. ஆனால், அரசியல் கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக, ஆளுநர் தன் பயண திட்டத்தை மாற்றி வண்டிப்பாளையம் அம்பேத்கர் நகரில் முதலில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, கட்டப்பட்டுள்ள தனிநபர் கழிவறைகளை பார்வையிட்ட அவர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின், அவர்கள் கூறிய குறைகளை அதிகாரிகள் மூலம் குறித்துக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறி உத்தரவிட்டார்.
இதன்பின், அங்கிருந்து கடலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே, செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்தி அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வில், கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம்.வடநேரே, ஆளுநர் மாளிகை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆளுநர் ஆய்வை முன்னிட்டு பேருந்து நிலையத்தில் குறைந்தளவில் மட்டுமே பேருந்துகள் இருந்ததால், பொதுமக்கள் அவதியடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.