TN Governor RN Ravi: சி.ஆர்.பி.எப். , பி.எஸ்.எப்., சி.ஐ.எஸ்.எப் போன்ற மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களது மாநில மொழிகளில் தேர்வு எழுத மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
மாநில அரசுகளும், கட்சித் தலைவர்களும் அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய உள்துறை அமைச்சகம், இனிமேல் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என தெரிவித்தது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.
ஆளுநர் பாராட்டு
இந்த நிலையில், மத்திய ஆயுதப் படைகளுக்கான ஆள்சேர்ப்பை தமிழில் நடத்த மத்திய அரசு எடுத்த முடிவு மிகவும் பாராட்டுக்குரியது என்றும், இது தமிழ் மீதான பிரதமர் மோடியின் அபரிமிதமான அன்பையும் மரியாதையையும் பிரதிபலிக்கிறது என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜ்பவன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "எதிர்வரும் அனைத்து மத்திய ஆயுதப் படைகளுக்கான ஆள்சேர்ப்பை தமிழ் மொழியில் நடத்த மத்திய அரசு எடுத்த முடிவு மிகவும் பாராட்டுக்குரியது. இது நமது மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தேர்வெழுதும் ஆர்வலர்களுக்கும் அவர்களின் கனவுகள் நனவாகவும் மத்திய ஆயுதப் படைகளில் அவர்களின் அதிக பங்களிப்பை உறுதிப்படுத்தவும், நமது பண்டைய தமிழ் மொழியை மேம்படுத்தவும் உதவும்.
இந்த முயற்சிக்காக மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இது தமிழ் மீதான அவரது அபரிமிதமான அன்பையும் மரியாதையையும் பிரதிபலிக்கிறது. இது ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உண்மையான உணர்வை மேலும் அதிகரிக்கும்." என்று பதிவிட்டுள்ளது.
மத்திய ஆயுதப்படை காவலர் பணிக்கான தேர்வு மார்ச் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 48 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். நாட்டின் 128 நகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ், அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி, கொங்கனி ஆகிய பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“